உள்ளூர் செய்திகள்

போதைப்பொருட்கள் கடத்தல் வழக்கில் மேலும் 3 பேர் கைது

Published On 2024-07-01 06:36 GMT   |   Update On 2024-07-01 06:36 GMT
  • யாருடைய முகமும் தங்களுக்கு தெரியாது என்று போதை விற்பனை கும்பல் தெரிவித்துள்ளனர்.
  • கஞ்சா சிகரெட்டுகள் ஆகியவையும், 2 கார்கள், 5 செல்போன்கள் ஆகியவையும் பறிமுதல் செய்யப்பட்டது.

பெரியகுளம்:

தேனி மாவட்டம் பெரியகுளம் வடகரை இன்ஸ்பெக்டர் பாஸ்டின் தினகரன் தலைமையிலான போலீசார் ஏ.புதுப்பட்டி பைபாஸ் சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது நள்ளிரவில் கொடைக்கானலில் இருந்து கம்பம் நோக்கி சென்ற கேரள பதிவெண் கொண்ட காரை நிறுத்தி சோதனையிட்டனர்.

அதில் 250 கிராம் கஞ்சா, ஒரு பாக்கெட் கஞ்சா சிகரெட் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டதில் மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தன. காரில் 50 கிராம் எடை கொண்ட 30 மெத்தபட்டமைன் போதை பாக்கெட்டுகள் இருந்தது தெரியவரவே அதனை கைப்பற்றினர். இதன் மதிப்பு ரூ.1.75 லட்சமாகும். இதனை தொடர்ந்து காரில் வந்த கொடைக்கானல் நாயுடுபுரத்தை சேர்ந்த விகாஸ் ஷியாம் (வயது 22), அதே பகுதியை சேர்ந்த ஆரிப் ராஜா (22), கம்பம் நாராயணதேவன்பட்டியை சேர்ந்த ராம்குமார் (33) ஆகிய 3 பேரை கைது செய்தனர்.

அவர்களுடன் வந்த சல்மான் என்பவர் தப்பியோடிவிட்டார். பிடிபட்ட நபர்களிடம் நடத்திய விசாரணையில் இவர்கள் பெங்களூரில் இருந்து ஆன்லைன் பணபரிவர்த்தனை செய்து போதை பொருட்களை விற்று வந்தது தெரியவந்தது. போதை கும்பல் கொடுத்த தகவலின் பேரில் தனிப்படை போலீசார் பல்வேறு இடங்க ளில் தேடுதல்வேட்டை மேற்கொண்டனர். கோவையை சேர்ந்த அன்பழகன் (25), வருசநாடு பகுதியை சேர்ந்த ஆனந்த் (23), பெங்களூரை சேர்ந்த யாசர் முத்தர் (23) ஆகியோரை கைது செய்தனர்.

அவர்களிடம் இருந்து ரூ.1.25 லட்சம் மதிப்பிலான 25 கிராம் மெத்தபட்டமைன் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

கைது செய்யப்பட்ட 6 பேர்களையும் தேனி மாவட்ட எஸ்.பி. சிவபிரசாத் உத்தரவின் பேரில் இன்று கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அவர்களிடமிருந்து ரூ.10 லட்சம் மதிப்பிலான 85 கிராம் மெத்தபட்டமைன், 10 கிராம கோகைன், போதை ஸ்டாம்பு, கஞ்சா சிகரெட்டுகள் ஆகியவையும், 2 கார்கள், 5 செல்போன்கள் ஆகியவையும் பறிமுதல் செய்யப்பட்டது.

முக்கிய குற்றவாளி களான நோகன் மற்றும் சல்மான் ஆகியோர் கேரளா மற்றும் பெங்களூரில் பதுங்கியிருப்பதாக தகவல் கிடைத்துள்ளதால் அவர்களை பிடிக்க தனிப்படை போலீசார் அங்கு விரைந்துள்ளனர்.

இந்த கும்பல் கொடைக்கானலில் பல ஆண்டுகளாக சுற்றுலா பயணிகளை குறிவைத்து போதை பொருட்கள் விற்பனை செய்வதை வாடிக்கையாக வைத்துள்ளனர். வெளிநாடுகளில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள் எவ்வளவு விலை கொடுத்தும் போதை பொருட்களை வாங்கிவிடுவார்கள் என்பதால் அதுபோன்ற நபர்களை குறிவைத்து இவற்றை விற்பனை செய்து வந்துள்ளனர். ஆன்லைன் உணவு டெலிவரி போல பணத்தை செலுத்தியதும், அவர்கள் இருக்கும் இடத்திற்கு போதை பொருட்கள் வந்து சேர்ந்துவிடும். இதனால் யாருடைய முகமும் தங்களுக்கு தெரியாது என்று போதை விற்பனை கும்பல் தெரிவித்துள்ளனர். இதன் நெட்ஒர்க் பல மாநிலங்களை கடந்து செல்வதால் மேலும் பலர் சிக்குவார்கள் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

Tags:    

Similar News