உள்ளூர் செய்திகள்

நீலகிரி சுற்றுலா தலங்களில் குவிந்த சுற்றுலா பயணிகள்

Published On 2022-08-22 10:40 GMT   |   Update On 2022-08-22 10:40 GMT
  • 2 வாரத்திற்கும் மேலாக தொடர்ந்து மழை பெய்து வந்தது.
  • வெளி மாநிலங்கள் மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் அதிகளவில் வருகின்றனர்.

ஊட்டி

நீலகிரி மாவட்டத்தில் கடந்த 2 வாரத்திற்கும் மேலாக தொடர்ந்து மழை பெய்து வந்தது.

தற்போது மழை குறைந்து, பகல் நேரங்களில் மிதமான வெயிலும், இரவில் நீர்ப்பனியும் நிலவி வருகிறது.இந்த இதமான காலநிலையை அனுபவிப்பதற்காகவும், இயற்கை வளம் மிகுந்த வனப்பகுதிகள் மற்றும் சுற்றுலா மையங்களை கண்டு ரசிக்கவும் தமிழகத்தின் பிற மாவட்டங்கள், வெளி மாநிலங்கள் மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் அதிகளவில் வருகின்றனர்.

இந்த ஆண்டு முதல் கோடை சீசனையொட்டி நீலகிரி மாவட்டத்துக்கு கடந்த ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் மட்டும் சுமார் 8 லட்சம் சுற்றுலா பயணிகள் வந்திருந்தனர்.

இதற்கிடையில் தென்மேற்கு பருவமழை தொடங்கியதால் கடந்த 2 மாதங்களாக இடைவிடாது மழை கொட்டியது. மேலும் கடும் குளிரும் காணப்பட்டதால், சுற்றுலா தலங்கள் அனைத்தும் வெறிச்சோடியது.

கடந்த சில நாட்களாக நீலகிரி மாவட்டத்தில் மழை குறைந்து காணப்படுகிறது. இதன் காரணமாக மீண்டும் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளது. கிருஷ்ண ஜெயந்தி விடுமுறை மற்றும் சனி, ஞாயிறு என தொடர் விடுமுறை விடப்பட்டதால் கடந்த 3 தினங்களாக ஊட்டிக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்தனர்.

இதனால் லவ்டேல் சந்திப்பு முதல் படகு இல்லம் வரையிலும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதோடு, நீண்ட தூரத்துக்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன.

இதைத் தொடா்ந்து போலீசாா் போக்குவரத்து நெரிசலை சரி செய்தனா்.

ஊட்டிக்கு வந்த சுற்றுலாப் பயணிகள் தாவரவியல் பூங்கா உள்ளிட்ட சுற்றுலாத் தலங்களை ஆா்வத்துடன் கண்டு ரசித்தனா்.

கடந்த 3 நாள்களில் மட்டும் தாவரவியல் பூங்காவுக்கு சுமாா் 20,000 சுற்றுலாப் பயணிகளும், ரோஜா பூங்காவுக்கு 8,000 சுற்றுலாப் பயணிகளும், ஊட்டி படகு இல்லத்துக்கு 10,000 சுற்றுலாப் பயணிகளும் வந்திருந்த நிலையில், பைக்காரா படகு இல்லத்தில் நீண்ட வரிசையில் காத்திருந்து படகு சவாரி செய்து மகிழ்ந்தனா்.

அதேபோல, மாவட்டத்தில் உள்ள அனைத்து சுற்றுலா மையங்களிலும் சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் அதிகரித்தே காணப்பட்டது.

Tags:    

Similar News