களக்காடு அருகே பழுதடைந்த சாலையால் போக்குவரத்து பாதிப்பு
- பெருமாள்குளத்தில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.
- குண்டும்- குழியுமான சாலையில் மழைநீர் தேங்கி நீச்சல் குளம் போல் காட்சி அளிக்கிறது.
களக்காடு:
களக்காடு அருகே உள்ள பெருமாள்குளத்தில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். பெருமாள்குளம் பஸ் நிறுத்தம் அருகே உள்ள சாலை அமைக்கப்பட்டு 15 ஆண்டு களை கடந்து விட்டதாக கூறப்படுகிறது.
தொடர்ந்து பராமரிப்பும் இல்லாததால் சாலை பழுதடைந்து காணப்படுகிறது. சாலையில் குண்டும், குழிகள் ஏற்பட்டுள்ளன. கற்கள் சிதறி கிடக்கிறது. இதனால் சாலையில் செல்ல முடியாமல் பொதுமக்கள் பாதிப்படை ந்துள்ளதாக புகார் தெரிவிக்கின்றனர்.
இருசக்கர வாகனங்களில் செல்லும் போது குண்டும், குழியுமான சாலையில் வாகனங்கள் சிக்கி கொள்வதால் விபத்துகள் ஏற்படுவதாக பொதுமக்கள் கூறுகின்றனர். மேலும், பெயர்ந்து கிடக்கும் கற்கள் வாகனங்களை பதம் பார்ப்பதால் அடிக்கடி பழுது ஏற்படுகிறது.
இந்நிலையில் தற்போது களக்காடு பகுதியில் பெய்து வரும் மழையினால் சாலையில் ஏற்பட்டுள்ள குண்டும்- குழியுமான சாலையில் மழைநீர் தேங்கி நீச்சல் குளம் போல் காட்சி அளிக்கிறது.
இதன் வழியாகவே பஸ்கள் மற்றும் வாகனங்கள் சென்று வருகின்றன. எனவே பராமரிப்பு இல்லாமல் பழுதடைந்து காணப்படும் இந்த சாலையை சீரமைக்க வேண்டும் என்று பெருமாள்குளம் பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதனை வலியுறுத்தி பெருமாள்குளத்தை சேர்ந்த சமூக ஆர்வலர் காட்வின் டைட்டஸ் அதிகாரிகளுக்கு மனுக்கள் அனுப்பி உள்ளார்.