கூடலூரில் பலத்த மழையால் போக்குவரத்து பாதிப்பு
- மழையால் வெப்பம் தணிந்து குளிர்ந்த காலநிலை நிலவியது.
- 1½ மணி நேரத்துக்கு பிறகு போக்குவரத்து சீரானது.
கூடலூர்
நீலகிரி மாவட்டம் கூடலூர் பகுதியில் கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இருப்பினும், வெப்பத்தை தணிக்கும் வகையில் மாலை நேரத்தில் அடிக்கடி பரவலாக மழை பெய்து வருகிறது. கடந்த ஒரு வாரமாக மழை இல்லாத நிலையில், நேற்று முன்தினம் மாலை 4 மணிக்கு திடீரென பலத்த மழை பெய்தது.
இதனால் வெப்பம் தணிந்து குளிர்ந்த காலநிலை நிலவியது. மேலும் மழை தொடர்ந்து பெய்து கொண்டிருந்ததால், கூடலூர் நகர சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. பலத்த மழை காரணமாக இருசக்கர வாகனங்களில் சென்றவர்கள் மழைக்கு ஆங்காங்கே ஒதுங்கி நின்றனர். மழையில் நனையாமல் இருக்க பொதுமக்கள் குடைகளை பிடித்த படி நடந்து சென்றனர்.
இந்தநிலையில் கூடலூரில் இருந்து மலப்புரத்துக்கு செல்லும் சாலையில் உள்ள கீழ்நாடு காணி பகுதியில் ராட்சத மரம் முறிந்து விழுந்தது. இதனால் தமிழ்நாடு-கேரளா மாநிலங்களுக்கு இடையே போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதன் காரணமாக வாகனங்கள் நீண்ட வரிசையில் அணிவகுத்து நின்றன. இதுகுறித்து தகவல் அறிந்த கூடலூர் தீயணைப்பு நிலைய அலுவலர் மார்ட்டின் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மின்வாள் மூலம் மரத்தை துண்டு, துண்டாக வெட்டி அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து 1½ மணி நேரத்துக்கு பிறகு போக்குவரத்து சீரானது. இதனால் தொலைதூரங்களுக்கு செல்ல வேண்டிய வாகனங்கள் தாமதமாக புறப்பட்டு சென்றது. இதேபோல் கூடலூர் சுற்றுவட்டார பகுதிகளில் பல இடங்களில் மரக்கிளைகள் முறிந்து விழுந்ததால், மின்வினியோகம் பாதிக்கப்பட்டது. இதனால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர்.