தீவுத்திடல் பகுதியில் இரவில் போக்குவரத்து மாற்றம்
- இந்தியாவில் முதல்முறையாக 'ஆன் ஸ்ட்ரீட் நைட் பாா்முலா 4 பந்தயம்' தீவுதிடல் மைதானத்தை சுற்றி நடைபெறுகிறது.
- கொடி மரச்சாலையில் போா் நினைவிடத்தில் இருந்து வாலாஜா சந்திப்பு வரை வாகனங்கள் செல்ல அனுமதி இல்லை.
சென்னை:
சென்னை போக்குவரத்து காவல்துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சாா்பில் இந்தியாவில் முதல்முறையாக 'ஆன் ஸ்ட்ரீட் நைட் பாா்முலா 4 பந்தயம்' தீவுதிடல் மைதானத்தை சுற்றி நடைபெறுகிறது. இந்தப் பந்தயம் டிசம்பா் 9, 10 ஆகிய இரு நாட்கள் நடைபெறும் நிலையில், தீவுத்திடல் மைதானத்தைச் சுற்றியுள்ள சில சாலைகள் பந்தய சுற்றுகளாக உருவாக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. எனவே அந்தப் பகுதியில் இன்று முதல் (வெள்ளிக்கிழமை) டிசம்பர் 1-ந்தேதி வரை இரவு மட்டும் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.
அதன்படி, கொடி மரச்சாலையில் போா் நினைவிடத்தில் இருந்து வாலாஜா சந்திப்பு வரை வாகனங்கள் செல்ல அனுமதி இல்லை. அந்த வாகனங்கள் ரிசா்வ் வங்கியின் சுரங்கப்பாதை, பாரிமுனை சென்று, அங்கிருந்து தங்களது இலக்கை நோக்கி செல்லலாம். முத்துசாமி பாலத்தில் இருந்து கொடி மர சாலை நோக்கி வாகனங்கள் வழக்கம்போல் அனுமதிக்கப்படும்.
அண்ணா சாலையில் பல்லவன் சாலை சந்திப்பு முதல் மன்றோ சிலை வரையிலும், சுவாமி சிவானந்தா சாலையில் பெரியாா் சிலை முதல் நேப்பியா் பாலம் வரையிலும், காமராஜா் சாலையில் நேப்பியா் பாலம் முதல் போா் நினைவிடம் வரையிலும் சாலை குறுக்கலாக்கப்படும். இந்த வழியாக வாகனங்கள் வழக்கம்போல செல்ல அனுமதிக்கப்படும். ஆனால் இந்தச் சாலைகளில் கனரக வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்படமாட்டாது.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.