அடிப்படை வசதிகள் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்
- பெண்கள் உள்ளிட்ட சுமார் 100-க்கும் மேற்பட்டோர் ஒன்று திரண்டு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
- திருப்பூர் - காங்கயம் மெயின் ரோட்டில் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
பல்லடம்:
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே பொங்கலூர் ஒன்றியம், நாச்சிபாளையம் ஊராட்சி ரங்கபாளையம் பிரிவில் ஜி.என். கார்டன் பகுதி உள்ளது.
இப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள், தெருவிளக்கு, தண்ணீர் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கேட்டு ஊராட்சி நிர்வாகத்திடம் பலமுறை மனு அளித்துள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் ஊராட்சி நிர்வாகம் இதுவரை நிறைவேற்றி கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.
இதையடுத்து அப்பகுதியை சேர்ந்த பெண்கள் உள்ளிட்ட சுமார் 100-க்கும் மேற்பட்டோர் இன்று காலை திடீரென ஒன்று திரண்டு நாச்சிப்பாளையம் திருப்பூர்- காங்கயம் மெயின் ரோட்டில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது குறித்த தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற அவிநாசி பாளையம் போலீசார் பொதுமக்களுடன் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது ஊராட்சி நிர்வாகத்துடன் பேசி அடிப்படை வசதிகள் செய்து தரப்படும் என உறுதி அளித்ததை தொடர்ந்து சாலை மறியல் போராட்டம் கைவிடப்பட்டது.
இதனால் திருப்பூர் - காங்கயம் மெயின் ரோட்டில் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும் பொதுமக்கள் நடத்திய போராட்டத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.