உள்ளூர் செய்திகள்

கிணற்றில் மூழ்கி 3 பள்ளி மாணவர்கள் பலி

Published On 2024-05-14 05:56 GMT   |   Update On 2024-05-14 05:56 GMT
  • பள்ளி விடுமுறை காலம் என்பதால் 3 பேரும் ஜாலியாக ஊரை சுற்றி விளையாடி வந்துள்ளனர்.
  • 3 சிறுவர்கள் கிணற்றில் மூழ்கி பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

கரூர்:

கரூர் ஆண்டாங் கோவில் புதூர் கீழ்பாகம் பகுதியை சேர்ந்தவர் ரமேஷ். இவரின் மகன் அஸ்வின்(வயது 12). இவர் அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வந்தார். அதே பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீதர். அவரது மகன் ஸ்ரீவிஷ்ணு (14). இவர் அரசு பள்ளியில் 8- ம் வகுப்பு பயின்று வந்தார்.

ஆண்டாங் கோவில் கிழக்கு பகுதி செல்வன் நகரை சேர்ந்தவர் இளங்கோவன் இவரது மகன் மாரி முத்து (13). இந்த மாணவர்கள் 3 பேரும் நண்பர்கள்.

பள்ளி விடுமுறை காலம் என்பதால் 3 பேரும் ஜாலியாக ஊரை சுற்றி விளையாடி வந்துள்ளனர். வழக்கம் போல நேற்று மாலை தங்கள் பெற்றோர்களிடம் விளையாட செல்கிறோம் என்று கூறி விட்டு வெளியே சென்றுள்ளனர்.

ஆனால் இரவு வெகு நேரம் ஆகியும் அந்த மாணவர்கள் வீடு திரும்பவில்லை. அதை தொடர்ந்து பெற்றோர்கள் அவர்களை தேட தொடங்கினர்.

பல்வேறு இடங்களில் தேடி அலைந்த போது இரவு 11 மணியளவில் அப்பகுதியில் உள்ள ரவிச்சந்திரன் என்பருக்கு சொந்தமான இடத்தில் சிறுவர்கள் 3 பேரின் செருப்பு கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

செருப்பு கிடந்த இடத்திற்கு அருகே கிணறு ஒன்றும் இருந்துள்ளது. இதனால் சந்தேகம் அடைந்த சிறுவர்களின் உறவினர்கள் கரூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் அளித்தனர்.

நிலைய அலுவலர் திருமுருகன் தலைமையில் அங்கு வந்த தீயணைப்பு வீரர்கள் கிணற்றுக்குள் பிரத்யேக டார்ச் லைட் அடித்து பார்த்தனர். ஆனால் அங்கு ஏதும் தென்படவில்லை.

பின்னர் அந்த நள்ளிரவிலும் கயிற்றின் உதவியுடன் தீயணைப்பு வீரர்கள் கிணற்றுக்குள் இறங்கி, நீரில் மூழ்கி தேடும் பணியில் ஈடுபட்டனர். இரவு முழுவதும் தேடும் பணி நடைபெற்றது.

இந்நிலையில் கிணற்றின் ஆழப்பகுதியில் சிறுவர்களின் உடல் தட்டுப்பட்டது, இதன் பின்னர் மேலும் சில வீரர்கள் கிணற்றுக்குள் இறங்கி சிறுவர்களின் உடல்களை இறந்த நிலையில் ஒன்றன் பின் ஒன்றாக மீட்டனர். சிறுவர்களின் உடல்களை கண்டு பெற்றோர்கள் கதறி துடித்தனர்.

இது குறித்து கரூர் டவுன் இன்ஸ்பெக்டர் மணிவண்ணன் தலைமையிலான போலீசார் சிறுவர்களின் உடல்களை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

விசாரணையில் இந்த சிறுவர்கள் குளிக்கும் போது அஸ்வின் என்ற சிறுவனுக்கு நீச்சல் தெரியாத நிலையில் அவர் மூழ்க, நண்பனை காப்பாற்றும் முயற்சியில் மற்ற 2 சிறுவர்களும் இறங்கி இருக்கலாம். இதில் 3 பேரும் நீரில் மூழ்கி இறந்திருக்கலாம் என கூறினர்.

உடல்களை கரூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.

3 சிறுவர்கள் கிணற்றில் மூழ்கி பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News