பாப்பாக்குடி வட்டாரத்தில் மாடித்தோட்டத்தில் காய்கறி வளர்த்தல் பயிற்சி
- ரஸ்தாவூரில் மாடித்தோட்டத்தில் காய்கறி வளர்ப்பதற்கான பயிற்சி நடைபெற்றது.
- ஒரு பயனாளி அதிகபட்சமாக 2 தொகுப்புகள் வரை பெறமுடியும்
நெல்லை:
தமிழக தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறையில் இந்த நிதியாண்டில் மாநில தோட்டக்கலை வளர்ச்சி திட்டத்தில் பாப்பாக்குடி வட்டாரத்தில் ரூ.4.70 லட்சம் மதிப்பில் திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன.
இந்நிலையில் வீட்டுத்தோட்டம் அமைப்பதை ஊக்குவிக்கும் நோக்கத்துடன் மாடித்தோட்ட தளைகள் 50 சதவீதம் மானியத்தில் வினியோகம் செய்யப்பட உள்ளது. பாப்பாக்குடி வட்டாரத்தில் ரஸ்தாவூரில் மாடித்தோட்டத்தில் காய்கறி வளர்ப்பதற்கான பயிற்சி நடைபெற்றது.
இப்பயிற்சியில் தோட்ட க்கலை உதவி இயக்குநர் சுபாவாசுகி கலந்து கொண்டு அனைவரும் தங்கள் வீட்டிற்கு தேவையான காய்கறிகளை தங்களது வீட்டிலேயே அங்கக முறையில் உற்பத்தி செய்து கொள்ளலாம் எனவும், ஒரு தொகுப்பின் மொத்த விலை ரூ.900, மானியம் ரூ.450, பயனாளியின் பங்குத்தொகை ரூ.450 எனவும் ஒரு பயனாளி அதிகபட்சமாக 2 தொகுப்புகள் வரை பெறமுடியும் எனவும் விளக்கினார்.
இதில் ஏற்கெனவே பயன்பெற்ற பயனாளி மாரியம்மாள், பாரதமணி, சோமு ஆகியோர் மாடித்தோட்டத்தில் காய்கறி வளர்க்கும் முறைகள் பற்றியும், காய்கறி வளர்ப்பதால் உள்ள நன்மைகளையும் விளக்கி கூறினார்கள். இப்பயிற்சியில் ரஸ்தாவூரை சேர்ந்த செம்பருத்தி, முப்புடாதி அம்மன், அன்னை தெரசா, சரோஜினி, அன்னை இந்திரா, மகளிர் மன்றம் ஆகிய பெயர்களில் செயல்படும் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டு பயன்பெற்றனர். முடிவில் உதவி தோட்டக்கலை அலுவலர் பாஸ்கர் நன்றி கூறினார்.