அரசு பள்ளிகளில் கூடுதல் உடற்கல்வி ஆசிரியர்கள் இடமாற்றம்-பள்ளிக் கல்வித்துறை நடவடிக்கை
- உடற்கல்வி ஆசிரியர்களை குறைக்கும் நடவடிக்கையை அரசு எடுத்துள்ளது.
- மாணவர்களின் கவனச் சிதறலுக்கு ஆளாகும்
சென்னை:
அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளில் உடற்கல்வி ஆசிரியர் பணியிடங்களை குறைத்து பணி நிரவல் கலந்தாய்வை பள்ளிக் கல்வி துறை நடத்துகிறது.
பள்ளி மாணவர்களுக்கு உடற்கல்வி வகுப்பு அவசியமாக உள்ளது. 1 முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு வாரத்தில் 2 நாட்கள் உடற்கல்வி வகுப்புகள் நடத்தப்பட வேண்டும்.
விளையாட்டுத்திறனை ஊக்குவிக்கும் பயிற்சி களமாக பள்ளி மைதானங்கள் விளங்கி வருகின்றன.
இந்த நிலையில் அரசு பள்ளிகளில் உடற்கல்விக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்ற கோரிக்கைகளுக்கு மத்தியில் உடற்கல்வி ஆசிரியர்களை குறைக்கும் நடவடிக்கையை அரசு எடுத்துள்ளது.
250 முதல் 400 மாணவர்களுக்கு ஒரு உடற்கல்வி ஆசிரியர் பணியாற்றி வந்த நிலையில் தற்போது 700 மாணவர்களாக அரசு உயர்த்தி உள்ளது.
1997-ம் ஆண்டு அரசாணையின்படி உயர்நிலைப் பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை 250-ஐ தாண்டும்போது ஒரு உடற்கல்வி ஆசிரியர் நியமிக்கப்படுவார்.
ஒவ்வொரு கூடுதல் 300 மாணவர்களுக்கும் ஒரு உடற்கல்வி ஆசிரியர். அதிகபட்சமாக 3 பேர் வரை நியமிக்கப்படுவார்கள். மேல் நிலைப்பள்ளிகளில் 400 மாணவர்களுக்கு ஒரு உடற்கல்வி இயக்குனர் நியமிக்கப்படுகிறார்.
அரசு பள்ளிகளில் போதிய அளவு உடற்கல்வி ஆசிரியர்கள் நியமிக்கப்படாமல் காலியாக இருந்த நிலையில் அந்த இடங்களுக்கு புதிய உத்தரவின் படி கூடுதலாக உள்ள உடற்கல்வி ஆசிரியர்களை இடமாற்றம செய்ய கல்வித்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
தற்போது 700 மற்றும் அதற்கு குறைவான மாணவர்கள் கொண்ட உயர்நிலை மற்றும் மேல் நிலை பள்ளிகளுக்கு ஒரு உடற்கல்வி ஆசிரியர் பணியிடம் மட்டும் அனுமதிக்கப்படுகிறது.
700-க்கும் அதிகமாக மாணவர்கள் உள்ள உயர்நிலைப் பள்ளிகளில் 2 உடற்கல்வி ஆசிரியர்கள், 701 முதல் 1500 வரை உள்ள மேல் நிலைப் பள்ளிகளில் ஒரு உடற்கல்வி ஆசிரியர், ஒரு உடற்கல்வி இயக்குனர் நிலை-2 என இரண்டு பேருக்கு அனுமதி.
1500-க்கும் மேல் உள்ள மேல் நிலைப் பள்ளிகளில் 2 உடற் கல்வி ஆசிரியர்கள் ஒரு உடற்கல்வி இயக்குனர் நிலை-2 அல்லது நிலை-1 என மொத்தம் 3 பேர் அனுமதிக்கப்படுவர் என்று உத்தரவிட்டுள்ளது.
தற்போது மாணவர்கள் இடையே போதைப்பொருள், புகையிலை பயன்பாடு இருக்கின்ற நிலையில் உடற்கல்வி ஆசிரியர்களை குறைப்பதன் மூலம் வகுப்புகள் குறையக் கூடும். இது மாணவர்களின் கவனச் சிதறலுக்கு ஆளாகும் என்று கல்வியாளர்கள் தெரிவிக்கின்றனர்.