மெக்காவுக்கு புனித பயணம் சென்று திரும்பிய பயணி மாரடைப்பால் மரணம்- குழுவினர் அதிர்ச்சி
- சர்வதேச விமான நிலையத்தில் தயார் நிலையில் இருந்த மருத்துவ குழுவினர் பயணி ராஜாமுகமதுவை பரிசோதனை செய்தனர்.
- உடலை பிரரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
ஆலந்தூர்:
தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு பகுதியை சேர்ந்தவர் ராஜா முகமது (வயது66). இவர் புனித பயணமாக மெக்காவிற்கு தனது குழுவினருடன் சென்று இருந்தார். பின்னர் அவர்கள் அனைவரும் இன்று அதிகாலை பக்ரைனில் இருந்து விமானம் மூலம் சென்னைக்கு வந்து கொண்டு இருந்தனர்.
நடுவானில் விமானம் பறந்து கொண்டிருந்த போது, ராஜா முகமதுவுக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. இதுகுறித்து விமான பணிப்பெண்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் ராஜா முகமதுக்கு முதலுதவி சிகிச்சை அளித்தனர். மேலும் இதுபற்றி சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதற்கிடையே இன்று அதிகாலை 3.15 மணிக்கு சென்னை சர்வதேச விமான நிலையத்தில் விமானம் தரை இறங்கியது. அப்போது அங்கு தயார் நிலையில் இருந்த மருத்துவ குழுவினர், பயணி ராஜாமுகமதுவை பரிசோதனை செய்தனர். ஆனால் அவர் ஏற்கனவே மாரடைப்பால் இறந்து இருப்பது தெரியவந்தது.
இதனால் அவருடன் வந்திருந்த குழுவினர் அதிர்ச்சி அடைந்தனர். இதுபற்றி அவரது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இறந்து போன ராஜாமுகமதுவின் உடலை விமான நிலைய போலீசார் மீட்டு பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
அந்த விமானம் மீண்டும் அதிகாலை 4.10 மணிக்கு சென்னையில் இருந்து பக்ரைனுக்கு புறப்பட்டுச் செல்ல வேண்டும். இதில் பயணம் செய்ய 192 பயணிகள் தயார் நிலையில் இருந்தனர்.
பயணி இறந்ததை தொடர்ந்து அந்த விமானத்தை ஊழியர்கள் கிருமிநாசினிகள் தெளித்து முழுமையாக சுத்தப்படுத்தினர். இதனால் விமானம் சுமார் இரண்டரை மணி நேரம் தாமதமாக காலை 6.40 மணிக்கு பக்ரைனுக்கு புறப்பட்டுச் சென்றது.