உள்ளூர் செய்திகள்

விமான நிலையத்தில் 5 வயது மகளை தவற விட்ட தந்தை

Published On 2022-09-21 09:07 GMT   |   Update On 2022-09-21 09:07 GMT
  • விமான நிலையத்தில் 5 வயது மகளை தவற விட்ட தந்தையால் பரபரப்பு
  • தாயை அழைத்து செல்ல வந்த போது நடந்தது

திருச்சி:

புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தைச் சேர்ந்தவர் சையது இப்ராஹிம். இவரது தாயார் கமாமிஷா நேற்று இரவு மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து ஏர் ஏசியா விமானத்தில் திருச்சிக்கு வந்தார். அவரை வரவேற்பதற்காக தனது குடும்பத்தினருடன் இப்ராஹிம் திருச்சி விமான நிலையம் வந்திருந்தார்.

பின்னர் தனது தாயார் விமான நிலையத்தில் இருந்து வெளியே வந்த போது அவரை அழைத்துக் கொண்டு வாகனத்தில் அனைவரும் புறப்பட்டு சென்று விட்டனர். அப்போதுவரை தான் அழைத்து வந்த 5 வயது மகள் வாகனத்தில் ஏறிவிட்டாரா என்பதை கவனிக்கவில்லை. தாயை பார்த்த ஆர்வத்தில் மகளை மறந்துவிட்டனர். இந்த நிலையில் ஒருசில கிலோ மீட்டர்கள் தூரம் வரை அவர்கள் சென்றபிறகுதான் இப்ராகிம் தனது மகளை தேடியுள்ளார். உடனடியாக அவர்கள் தங்கள் வாகனத்தை திருப்பி மீண்டும் விமான நிலையம் நோக்கி பயணித்தனர்.

இதற்கிடையே திருச்சி விமான நிலையத்தின் முனைய பகுதியில் குழந்தை ஒன்று தனியாக நின்று அழுது கொண்டிருந்ததை மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் பார்த்தனர். பின்னர் அந்த குழந்தையை அழைத்துச் சென்று முனைய மேலாளர் அறையில் அமர வைத்து ஒலிபெருக்கி மூலம் குழந்தையின் பெயர் மற்றும் அவரது பெற்றோர் குறித்த விபரங்களை பொது மக்களுக்கு தகவல் அளித்து வந்தனர்.

சுமார் அரை மணி நேரம் தகவல் தெரிவித்தும் யாரும் அழைத்து செல்ல வராத காரணத்தினால் குழந்தை பத்திரமாக முனையை மேலாளர் அறையிலேயே தங்க வைக்கப்பட்டது. சுமார் அரை மணி நேரத்திற்கு பிறகு தனது குழந்தையை காணவில்லை என மீண்டும் விமான நிலையத்திற்குள் நுழைந்த பெற்றோர் அங்குமிங்கும் தேடினர்.

அப்போது அவர்களிடம் குழந்தை முனைய மேலாளர் அறையில் இருப்பதாக தொழில் பாதுகாப்பு படையினர் தெரிவித்தனர். உடனே ஓடிச்சென்ற அவர்கள் குழந்தையை பார்த்ததும் கண்ணீர் விட்டனர். மேலும் பத்திரமமாக குழந்தையை மீட்டு ஒப்படைத்ததற்காக விமான நிலைய அதிகாரிகளுக்கு நன்றி தெரிவித்தனர்.

இதையடுத்து குழந்தை பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. தொடர்ந்து அவர்கள் குழந்தையுடன் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டு சென்றனர். திருச்சி விமான நிலையத்தில் பயணிகள் தவறவிடும் பொருட்களை பத்திரமாக மீட்டு பயணிகளிடம் ஒப்படைக்கும் பணியை மேற்கொண்டு வந்த மேலாளர்கள், நேற்று குழந்தையையும் பத்திரமாக மீட்டு பெற்றோர்களிடம் ஒப்படைத்தது நெகிழ்ச்சியையும், பலரது பாராட்டுகளையும் பெற்றுள்ளது.

Tags:    

Similar News