உள்ளூர் செய்திகள்

லால்குடி பகுதி மக்கள் கலெக்டர் அலுவலகம் முற்றுகை

Published On 2023-02-20 10:13 GMT   |   Update On 2023-02-20 10:30 GMT
  • கோவில் திருவிழா நடத்த தடை
  • லால்குடி பகுதி மக்கள் கலெக்டர் அலுவலகம் முற்றுகையிட்டு போராட்டம்

திருச்சி:

திருச்சி மாவட்டம் லால்குடி அன்பில் கிராமத்தில் ஆச்சிராம வள்ளியம்மன் கோவில் அமைந்துள்ளது.இந்தக் கோவிலில் அந்த பகுதியை சுற்றியுள்ள ஜங்கம ராஜபுரம், மங்கம்மாள் புரம், கீழ அன்பில் ஆகிய மூன்று கிராமங்களை சேர்ந்த மக்கள் வழிபட்டு வருகின்றனர். இங்கு ஆண்டுதோறும் மாசி மாதத்தில் திருவிழா நடைபெற்று வருகிறது. வழக்கமாக நடப்பு ஆண்டில் இன்று( திங்கட்கிழமை) இந்த கோவிலில் காப்பு கட்டுதல் நடைபெறும். ஆனால் நடப்பு ஆண்டு விழாவுக்கு உதவி கலெக்டர் அனுமதி மறுத்துள்ளார்.அதைத்தொடர்ந்து கிராம மக்கள் இன்று திருச்சி கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு கலெக்டர் பிரதீப் குமாரிடம் புகார் மனு அளித்தனர்.பின்னர் அவர்கள் கூறும் போது, ஆண்டாண்டு காலமாக முந்தைய வழக்கப்படி சாமி திருவீதி உலா நடத்தப்பட்டு வந்தது. இந்த நிலையில் ஒரு சமூகத்தினர் தங்களது தெருக்களுக்கும் திருவீதி உலா அழைத்து வர வேண்டும் என நீதிமன்றத்தை நாடினர்.ஆனால் நீதிமன்றம் அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளது. இந்து சமய அறநிலையத்துறையும் கோவில் திருவிழாவை நடத்த அனுமதி அளித்துள்ளது. இந்த நிலையில் உதவி கலெக்டர் சட்டம் ஒழுங்கு பிரச்சனையை காரணம் காட்டி கோவில் விழாவை நடத்த அனுமதி மறுத்து வருகிறார்.தன்னிச்சையாக செயல்படும் அவரை மாற்றிவிட்டு கோவில் திருவிழாவை நடத்த அனுமதி அளிக்க வேண்டும் என்றனர். முன்னதாக அவர்கள் கலெக்டர் அலுவலகத்துக்குள் ஊர்வலமாக செல்ல அனுமதி கேட்டு போலீசார் உடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

Tags:    

Similar News