துறையூர் அருகே 100 நாள் வேலையில் சம்பளம் வழங்காததை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்
- 100 நாள் வேலையில் நிலுவை சம்பளம் வழங்கவில்லை
- பொதுமக்கள் சாலை மறியல்
துறையூர், திருச்சி மாவட்டம் துறையூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட கொட்டையூர் ஊராட்சி சங்கம்பட்டி கிராமத்தில் 100-க்கும் மேற்பட்ட விவசாய தொழிலாளர்கள் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் பயனடைந்து வந்தனர். இந்நிலையில் கடந்த 1 வார காலமாக ஊராட்சி நிர்வாகத்தின் சார்பில் வேலை வழங்கப்படாமலும், ஏற்கனவே செய்யப்பட்ட வேலைக்கு சம்பள பணம் பட்டுவாடா செய்யப்படாமலும் இருந்ததாக கூறப்படுகிறது. இதனை கண்டித்து சங்கம்பட்டி கிராம பொதுமக்கள் சங்கம்பட்டி - எரகுடி சாலையில் திடீரென்று சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனை அறிந்த துறையூர் போலீசார் மற்றும் ஊரக வளர்ச்சி துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது தற்சமயம் ஏற்கனவே தேர்வு செய்யப்பட்ட இடம் மழையின் காரணமாக சேறாக இருப்பதால், புதிய இடம் தேர்வு செய்யப்பட்டு பணி வழங்கப்படும் எனவும், சம்பள பணம் இந்த வாரத்தில் கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்ததை அடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர். இதனால் சங்கம்பட்டி- எரகுடி சாலையில் ஒரு மணி நேரமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.