மல்லிகை சாகுபடியில் இழப்பை ஏற்படுத்தி வரும் சிறிய ரக ஈக்கள்
- சிறிய ரக ஈக்கள் மலர்களை சேதப்படுத்தி வருகின்றன
- விவசாயிகளுக்கு அதிகாரிகள் அறிவுரை
திருச்சி,
திருச்சி மாவட்டத்தில் 1,400 ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் மல்லிகை (குண்டுமல்லி) பயிரிட்டுள்ளனர். குறிப்பாக போசம்பட்டி, பொடவூர், புலியூர், கோப்பு, வியாழன் மேடு, அயிலாடிப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் அதிக அளவு மல்லிகை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தற்போது அந்த பயிர்கள் பூக்கள் பூக்கும் பருவத்தை எட்டி உள்ளது.இந்த நிலையில் சிறிய ரக ஈக்கள் மலர்களை சேதப்படுத்தி வருகின்றன. இதனால் மலர் மொட்டுகள் சிவப்பு நிறமாகி அதன் பின்னர் பூக்கள் உதிர்து விடுகின்றன. மேலும் மொட்டுகளின் தரமும் கடுமையாக பாதிக்கப்படுகிறது.இதன் காரணமாக மகசூல் மற்றும் வருமானம் குறைந்துள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். அதைத் தொடர்ந்து, சிறுகமணியைச் சேர்ந்த கே.வி.கே. விஞ்ஞானிகள், மத்திய ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை மையம் (சி.ஐ.பி.எம்.சி.) மற்றும் தோட்டக்கலை மற்றும் தோட்டப் பயிர்கள் துறை அதிகாரிகளுடன் இணைந்து மேற்கண்ட கிராமங்களில் ஆய்வு மேற்கொண்டனர்.அப்போது விவசாயிகள் தங்களுக்கு ஏற்பட்டுள்ள இடர்பாடுகளை தெரிவித்தனர். இதையடுத்து பூச்சிகளை கட்டுப்படுத்த போலியார் ஸ்ப்ரேயினை வார இடைவெளியில் தெளிக்க அறிவுறுத்தினர்.