உள்ளூர் செய்திகள்

உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராக வரவேண்டும்-அமைச்சர் சிவசங்கர்

Published On 2024-08-22 05:58 GMT   |   Update On 2024-08-22 05:58 GMT
  • சென்னையில் தற்போது தாழ்தள பேருந்துகள் தொடக்கி வைக்கப்பட்டுள்ளது.
  • எச்.ராஜா தொடர்ந்து மக்களால் ஒதுக்கி தள்ளப்பட்டவர்.

அரியலூர்:

அரியலூரில் விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் நடைபெற்ற விழாவில் போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் கலந்து கொண்டார்.

பின்னர் அவர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

போக்குவரத்து துறையின் மூலம் சென்னையில் தற்போது தாழ்தள பேருந்துகள் தொடக்கி வைக்கப்பட்டுள்ளது. மின்சார பேருந்துகள் வாங்குவதற்கான டெண்டர் கோரப்பட்டுள்ளது. டெண்டர் முடிவுற்ற பிறகு மின்சாரப் பேருந்துகள் செயல்பாட்டிற்கு வர உள்ளது.

சென்னையில் கையடக்க கருவியோடு டிக்கெட் வழங்குகின்ற கருவி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதன்பிறகு அரசு விரைவு போக்குவரத்துக் கழகத்திலும் மற்ற போக்குவரத்துக் கழகங்களிலும் அடுத்தடுத்த கட்டங்களில் அறிமுகப்படுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

எங்களை போன்ற தொண்டர்கள் எல்லாம் உதயநிதி ஸ்டாலின் விரைவில் துணை முதல்வராக வேண்டும் என்று காத்திருக்கிறோம்.

பா.ஜ.க.வின் மூத்த தலைவர் எச்.ராஜா தான் தமிழ்நாட்டுக்கு பெரும் தீங்கானவர். உதயநிதி செயல்பாட்டை மக்கள் அறிவார்கள். அதனால் தான் அவர் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு சட்டப்பேரவை உறுப்பினராகி அமைச்சராகி உள்ளார்.

ஆனால் எச்.ராஜா தொடர்ந்து மக்களால் ஒதுக்கி தள்ளப்பட்டவர். எடப்பாடி பழனிச்சாமி ஒரு அடிப்படை அரசியல் கூட தெரியாமல் முதல்வரானவர். நாணயம் வெளியீடு என்பது ஒரு அரசு விழா. அரசு விழா நடைபெறும் போது மத்திய அரசு, மாநில அரசு இணைந்து பங்கேற்புடன் நடைபெற்று உள்ளது.

தி.மு.க. சார்ந்த நிகழ்வுகள் நடைபெறும் போது அதில் கூட்டணி கட்சித் தலைவர்கள் பங்கேற்பது வழக்கமாக உள்ளது.

எடப்பாடி பழனிச்சாமி தனது முதுகை முதலில் பார்க்கட்டும். பிறகு மற்றவர்களை விமர்சிக்கட்டும். காய்ந்த மரம் கல்லடிபடும் என்ற அடிப்படையில் ஆளுங்கட்சியை எல்லோரும் விமர்சிப்பது வழக்கம்.

அதுபோல சீமான் விமர்சிக்கிறார். ஊடக வெளிச்சம் வர வேண்டும் என்பதற்காக தரக்குறைவான விமர்சனங்களை சொல்கிறார். அவர்களெல்லாம் மக்களால் ஒதுக்கி தள்ளப்படுவார்கள்.

இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.

Tags:    

Similar News