கோடை வெப்பத்தின் தாக்கத்தால் வறண்டு போன பஞ்சலிங்க அருவி
- கடந்த சில மாதங்களாக வனப்பகுதியில் கடும் வறட்சி நிலவி வருகிறது.
- அணையின் பாதுகாப்புக்காக அமைக்கப்பட்ட கம்பி வேலி சேதமடைந்ததே இதற்கு காரணம்.
உடுமலை:
திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்த திருமூர்த்தி மலையில் உடுமலை வனச்சரகத்தின் அடர்ந்த வனப்பகுதியில் பஞ்சலிங்க அருவி உள்ளது. அருவிக்கு மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் உற்பத்தியாகும் குறுமலை ஆறு, பாரப்பட்டி ஆறு, கிழவிப்பட்டி ஓடை, உழுவி ஆறு, கொட்டை ஆறு, உப்பு மண்ணம் பள்ளம் உள்ளிட்ட ஆறுகள் மூலமாக மழைக்காலங்களில் நீர்வரத்து ஏற்படுகிறது.
அப்போது வனப்பகுதியில் நீர்வழித்தடங்களில் தேங்கி இருக்கும் மருத்துவ குணமிக்க மூலிகைகள் தண்ணீருடன் கலந்து பஞ்சலிங்க அருவியில் ஆர்ப்பரித்துக் கொட்டுகிறது. அதில் குளித்து புத்துணர்வு பெறுவதற்காக வெளியூர், வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்களில் இருந்து நாள்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் திருமூர்த்தி மலைக்கு வருகை தருகின்றனர்.
இந்த சூழலில் கடந்த சில மாதங்களாக வனப்பகுதியில் கடும் வறட்சி நிலவி வருகிறது. இதன் காரணமாக பஞ்சலிங்க அருவியின் நீர்பிடிப்பு பகுதியில் உற்பத்தியாகின்ற ஆறுகள் நீர்வரத்தை முற்றிலுமாக இழந்து விட்டன. இதனால் பஞ்சலிங்க அருவி தண்ணீர் இல்லாமல் வெறுமனே காட்சி அளிக்கிறது.
இதன் காரணமாக திருமூர்த்திமலைக்கு வருகை தருகின்ற சுற்றுலா பயணிகள் அருவியில் குளிக்க முடியாமல் ஏமாற்றமடைந்து திரும்பிச் செல்கின்றனர். ஆனாலும் அருவிக்கு சென்று பார்வையிட்டு திரும்பிச் செல்வதை வாடிக்கையாக கொண்டு உள்ளனர். வெப்பத்தின் தாக்கம் குறைந்து வனப்பகுதியில் மழை பெய்து அருவிக்கு நீர்வரத்து ஏற்படும் என பக்தர்கள், சுற்றுலா பயணிகள் ஆவலோடு எதிர்பார்த்து காத்துள்ளனர்.
கோவிலுக்கு வந்து விட்டு திரும்பி செல்கின்ற பக்தர்கள் குறைவான நீர் இருப்பு உள்ள திருமூர்த்தி அணைப்பகுதியில் இறங்கி ஆபத்தான முறையில் குளித்து வருகிறார்கள். அணையின் பாதுகாப்புக்காக அமைக்கப்பட்ட கம்பி வேலி சேதமடைந்ததே இதற்கு காரணம். அதை புதுப்பிப்பதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் விலைமதிப்பற்ற மனித உயிர் பறிபோகும் நிலை ஏற்பட்டுள்ளது. அணையில் சேதம் அடைந்த கம்பி வேலியை சீரமைத்தும், கோடைகாலம் முடியும் வரையில் தகுந்த போலீஸ் பாதுகாப்பையும் போடுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.