கீரம்பூர் சுங்கச்சாவடி அருகே அனுமதியின்றி நடந்த பைக் சாகச நிகழ்ச்சி
- நாமக்கல் பைக்கர்ஸ் கிளப் என்ற அமைப்பை நடத்தி வரும் சிலர் பைக் சாகச நிகழ்ச்சி நடத்த உள்ளதாக கடந்த சில நாட்களுக்கு முன்பு சமூக வலைதளங்களில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருந்தனர்.
- நேற்று காலை இந்த பைக் சாகச நிகழ்ச்சியானது நடைபெற்றது.
பரமத்தி வேலூர்:
நாமக்கல் மாவட்டம் கீரம்பூர் அருகே ராசாம்பாளையம் சுங்க சாவடி அருகே, நாமக்கல் பைக்கர்ஸ் கிளப் என்ற அமைப்பை நடத்தி வரும் சிலர் பைக் சாகச நிகழ்ச்சி நடத்த உள்ளதாக கடந்த சில நாட்களுக்கு முன்பு சமூக வலைதளங்களில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருந்தனர்.
அதன்படி நேற்று காலை இந்த பைக் சாகச நிகழ்ச்சியானது நடைபெற்றது. இதில் பைக்குகளை வைத்து அந்தரத்தில் பறந்தும், ஒற்றை சக்கரத்தில் பைக்கை தூக்கி வீலிங் செய்தும் சாகசத்தில் ஈடுபட்டனர். அதேபோல் கைகளை விட்டபடியே பைக்கை ஒட்டியும் சாகசம் செய்தனர். இதற்கு பார்வையாளர்களாக செல்லுபவர்களுக்கு ரூ.500 நுழைவு கட்டணமாகவும் நிர்ணயம் செய்யப்பட்டது.
இந்த நிலையில், இந்த சாகச நிகழ்ச்சிக்கு காவல்துறையினரின் அனுமதி பெறவில்லை என கூறப்படுகிறது. இதுபோன்ற சாகச நிகழ்ச்சி நடத்துவதற்கு முதலில் காவல்துறையினரின் அனுமதி பெற வேண்டும். அதுமட்டுமின்றி சம்மந்தப்பட்ட இடத்தில் மருத்துவக் குழு மற்றும் ஆம்புலன்ஸ் வாகனங்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும்.
பார்வையாளர்கள் ஒரு குறிப்பிட்ட தூரத்திற்கு மட்டும் அனுமதிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு நிபந்தனைகள் உள்ளது. ஆனால் இதுபோன்ற எவ்வித நிபந்தனைகளையும் கடைப்பிடிக்காமல் இந்த சாகச நிகழ்ச்சி நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கலைச்செல்வன் தெரிவித்துள்ளார்.