உள்ளூர் செய்திகள்

கோவையில் 8 மையங்களில் நாளை யு.பி.எஸ்.சி தேர்வு

Published On 2023-07-01 09:19 GMT   |   Update On 2023-07-01 09:19 GMT
  • தேர்வு மையங்களில் கைப்பேசி ஜாமர்கள் பொருத்தப்பட்டுள்ளன.
  • மத்திய அரசால் வழங்கப்பட்டுள்ள அடையாள அட்டைகளில் ஏதாவது ஒன்று எடுத்து வர வேண்டும்

கோவை,

யுபிஎஸ்சி தேர்வு கோவை மாவட்டத்தில் 8 மையங்களில் ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 2) நடைபெறவுள்ளது.

இது குறித்து மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி கூறியுள்ளதாவது:-

கோவை மாவட்டத்தில் 8 மையங்களில் நடைபெறும் இந்தத் தேர்வை 7,815 பேர் எழுதவுள்ளனர். மத்திய அரசுப்பணியாளர் தேர்வாணைய மாவட்ட ஒருங்கிணைப்பு மேற்பார்வையாளர், மாவட்ட ஆட்சியரின் தலைமையில் துணை ஆட்சியர் நிலையில் 2 உதவி ஒருங்கிணைப்பு மேற்பார்வையாளர்கள், வட்டாட்சியர் நிலையில் 8 தேர்வு மையங்களுக்கு தலா ஒரு தேர்வு மைய உதவி கண்காணிப்பாளர்கள், 171 அறைக்கண்காணிப்பாளர்கள் மாவட்ட நிர்வாகத்தின் மூலமும், மேலும் 163 அறைக் கண்காணிப்பாளர்கள் தேர்வு மைய கண்காணிப்பாளர்கள் மூலமும் என மொத்தம் 334 அறை கண்காணிப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

தேர்வின் செயல்பாடுகளை ஆய்வு செய்ய மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் துணை செயலர் நிலையில் அலுவலர் ஒருவரும் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

காவல் துறையினரால் தேர்வு மையங்களுக்கு போதுமான பாதுகாப்பு வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

தேர்வு மையங்களில் கைப்பேசி ஜாமர்கள் பொருத்தப்பட்டுள்ளன. தேர்வு மையங்களுக்கு மாணவர்கள் எளிதில் செல்லும் வகையில், உக்கடம், சிங்காநல்லூர், சூலூர், காந்திபுரம் பஸ் நிலையங்களில் இருந்து பஸ் வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

தேர்வர்கள் தேர்வு தொடர்பான அறிவுரைகளை பெறும் வகையில் ஒரு மணி நேரத்திற்கு முன்பாகவே வர வேண்டும்.

யுபிஎஸ்சி இணையதளம் வழியே பதிவிறக்கம் செய்யப்பட்ட நுழைவுச்சீட்டு மற்றும் தேர்வரின் புகைப்படத்துடன் கூடிய ஆதார், ஓட்டுநர் உரிமம் போன்ற மத்திய அரசால் வழங்கப்பட்டுள்ள அடையாள அட்டைகளில் ஏதாவது ஒன்று, பாஸ்போர்ட் அளவிலான புகைப்படம் ஒன்றை எடுத்து வர வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News