மூல வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கால் விவசாயிகள் மகிழ்ச்சி
- தேனி மாவட்டம் கடமலை-மயிலை ஒன்றியம் வெள்ளிமலை வனப்பகுதியில் மூல வைகை ஆறு உற்பத்தியாகிறது.
- பெரியாறு 98.4, வைகை அணை 3.2 மி.மீ மழை பதிவாகியுள்ளது.
வருசநாடு:
தேனி மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. ஒரு சில இடங்களில் சாரல் மழையும், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள பகுதிகளில் 4 மணி நேரத்துக்கும் மேலாக மழை கொட்டித் தீர்த்தது.
தேனி மாவட்டம் கடமலை-மயிலை ஒன்றியம் வெள்ளிமலை வனப்பகுதியில் மூல வைகை ஆறு உற்பத்தியாகிறது. கடந்த சில மாதங்களாக வனப்பகுதியில் போதிய அளவில் மழை இல்லாத காரணத்தால் வைகை ஆற்றில் நீர்வரத்து குறைந்து வந்தது. மேலும் கடந்த சில நாட்களாக கடமலை-மயிலை ஒன்றிய கிராமங்களில் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. அதே நேரம் மாலை நேரங்களில் பலத்த சூறாவளி காற்று வீசியது. இதனால் கிராமங்களில் அடிக்கடி மின்தடை ஏற்பட்டு பொதுமக்கள் அவதியுற்று வந்தனர். இந்த நிலையில் கடந்த 3 நாட்களாக வெயிலின் தாக்கம் குறைந்து குளிர்ந்த காற்று வீசியது. அவ்வப்போது சாரல் மழையும் பெய்து வந்ததால் கிராமங்களில் வெப்பத்தின் தாக்கம் குறைந்து குளிர்ச்சியான சூழ்நிலை நிலவியது.
தொடர் சாரல் மழையின் காரணமாக கடந்த 3 நாட்களுக்கு முன்பு ஆற்றில் நீர்வரத்து அதிகரிக்க தொடங்கியது. இந்த நிலையில் நேற்று இரவு வெள்ளிமலை வனப்பகுதியில் 4 மணி நேரத்திற்கு மேலாக கனமழை பெய்தது. அதன் காரணமாக இன்று காலை வைகை ஆற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் பொதுமக்களும் விவசாயிகளும் மகிழ்ச்சியடைந்துள்ளனர். வெள்ளிமலை வனப்பகுதியில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் வரும் நாட்களில் வெள்ளப்பெருக்கு மேலும் அதிகரிக்க வாய்ப்புகள் உள்ளது. எனவே கரையோரம் வசிக்கும் பொதுமக்கள் ஆற்றில் இறங்கவோ, கடக்கவோ வேண்டாம் என அந்தந்த ஊராட்சி நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
வைகை அணையில் இருந்து தற்போது திண்டுக்கல், மதுரை மாவட்ட பாசனத்துக்காக தண்ணீர் திறக்கப்பட்டு வருவதால் அணையின் நீர் மட்டம் குறைந்தது. ஆனால் தற்போது பெய்து வரும் மழை காரணமாகவும், முல்லைப்பெரியாறு அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறப்பின் காரணமாகவும், மீண்டும் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. இன்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 51.90 அடியாக உள்ளது. வரத்து 1000 கன அடி. திறப்பு 869 கன அடி. இருப்பு 2250 மி.கன அடி.
முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 123.30 அடி. வரத்து 6264 கன அடி. திறப்பு 1178 கன அடி. இருப்பு 3281 மி.கன அடி.
பெரியாறு 98.4, வைகை அணை 3.2 மி.மீ மழை பதிவாகியுள்ளது.