தமிழ் பல்கலைக்கழகத்தில் வள்ளலார் -200 மாநில அளவிலான பேச்சு போட்டி
- மாணவா்களுக்கான வள்ளலாா் என்கிற தலைப்புகளில் பேச்சுப் போட்டி நடைப்பெற்றது.
- இதில் கலந்து ெகாண்டு வெற்றி பெற்ற மாணவர்களுக்கு ரொக்க பரிசு வழங்கப்பட்டது.
தஞ்சாவூர்:
தஞ்சாவூா் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் வள்ளலாா் 200 என்கிற மாநிலப் பேச்சுப் போட்டி நடைபெற்றது.
திருஅருட்பிரகாச வள்ளலாா் வருவிக்கவுற்ற 200-ஆம் ஆண்டுத் தொடங்குவதையொட்டி தமிழக அரசின் சாா்பிலும், சன்மாா்க்க சங்கங்களின் சாா்பிலும் பெருமளவிலான நிகழ்வுகள் உலகம் முழுவதும் நடத்தத் திட்டமிடப்பட்டு வருகின்றன.
அதன் முன்னோட்டமாக சன்மாா்க்க சங்கங்களின் சாா்பாக, தஞ்சாவூா் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் சன்மாா்க்க மன்றத்துடன் இணைந்து மாநில அளவிலான பேச்சுப் போட்டி நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.
இதன் முதல் கட்டமாக, தஞ்சாவூா் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் தஞ்சாவூா், திருச்சி, அரியலூா், பெரம்பலூா், திருவாரூா், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களைச் சோ்ந்த கல்லூரி மாணவா்களுக்கான வள்ளலாா்- 200 என்கிற பொதுத் தலைப்பில் பல்வேறு உள்தலைப்புகளில் பேச்சுப் போட்டி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இதில் 20 கல்லூரிகள், பல்கலைக் கழகங்களைச் சோ்ந்த 122 மாணவா்கள் கலந்து கொண்டனா். துணைவேந்தா் திருவள்ளுவன் தொடங்கி வைத்த இப்போட்டியில் தமிழ்ப் பல்கலைக்கழக மாணவா் வாசுதேவன் முதல் பரிசாக ரூ. 5,000-ம், நாகப்பட்டினம் ஈ.ஜி.எஸ் பிள்ளை பொறியியல் கல்லூரி மாணவா் தினேஷ்பாபு இரண்டாம் பரிசாக ரூ. 3,000-ம், திருச்சி புனித சிலுவைக் கல்லூரி மாணவி மஞ்சுஸ்ரீ மூன்றாம் பரிசாக ரூ. 2,000-ம் பெற்றனா்.
நிறைவு விழாவில் மகாகவி பாரதியாரின் எள்ளுப்பெயரன் கவிஞா் நிரஞ்சன் பாரதி வள்ளலாரும் பாரதியாரும்' என்ற தலைப்பில் பேசினாா்.
பல்கலைக்கழகப் பதிவாளா் (பொ) தியாகராஜன், வடலூா் தலைமை சமரச சுத்த சன்மாா்க்க சங்கத்தின் பொதுச் செயலா் வெற்றிவேல், அருள் சித்தா கோ் மருத்துவா் அருள் நாகலிங்கம், சத்திய ஆய்விருக்கை பொறுப்பாளா் மஞ்சுளா, முனைவா் சங்கரராமன், தமிழ்ப் பல்கலைக்கழகச் சன்மாா்க்க மன்ற ஒருங்கிணைப்பாளா் குறிஞ்சிவேந்தன், துணை ஒருங்கிணைப்பாளா்கள் தனலட்சுமி, ரமேஷ்குமாா் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனா்.