உயிரை கொடுத்து குழந்தைகள் உயிரை காப்பாற்றிய வேன் டிரைவர்: மு.பெ.சாமிநாதன் ரூ.5 லட்சம் நிதியுதவி
- 20 குழந்தைகளின் உயிரை காப்பாற்றி உள்ளார்.
- மு.க.ஸ்டாலின் சேமலையப்பன் மறைவுக்கு இரங்கல்.
திருப்பூர்:
திருப்பூர் மாவட்டம் காங்கயம் சத்யா நகரை சேர்ந்தவர் சேமலையப்பன் (வயது 49). இவர் வெள்ளகோவில் அய்யனூர் அருகில் உள்ள தனியார் மெட்ரிக் பள்ளியில் வேன் டிரைவராக வேலை செய்து வந்தார்.
நேற்று முன்தினம் இவர் பள்ளி முடிந்து குழந்தைகளை வீட்டில் கொண்டு விடுவதற்காக வேனில் அழைத்துக்கொண்டு சென்றார். வெள்ளகோவில் போலீஸ் நிலையம் அருகே கோவை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் வேன் வந்து கொண்டிருந்த போது திடீரென்று சேமலையப்பனுக்கு மாரடைப்பு ஏற்பட்டது.
இருப்பினும் அசம்பாவிதம் நிகழ்வதற்கு முன் வேனில் இருந்த குழந்தைகளை காப்பாற்ற வேண்டும் என்பதற்காக தன் உயிரை கையில் பிடித்தபடி மிகவும் சிரமப்பட்டு வேனை சாலை ஓரமாக நிறுத்திவிட்டு இருக்கையில் இருந்தபடியே ஸ்டிரியங்கில் மயங்கி சரிந்து உயிரிழந்தார்.
இதனால் வேனில் இருந்த 20 குழந்தைகள் உயிர் தப்பினர். நெஞ்சு வலியால் துடித்த போதும் தனது உயிரை கொடுத்து பள்ளி குழந்தைகளை காப்பாற்றிய சேமலையப்பனின் செயல் பொது மக்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த சம்பவத்தை அறிந்த தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சேமலையப்பன் மறைவுக்கு இரங்கல் தெரிவித்ததுடன், ரூ.5 லட்சம் நிதி வழங்க உத்தரவிட்டார்.
இதையடுத்து இன்று காலை தமிழக செய்தி துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன், காங்கயம் சத்யாநகரில் உள்ள சேமலையப்பன் வீட்டிற்கு சென்றார்.அங்கு அவரது குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறியதுடன், ரூ. 5 லட்சம் நிதிக்கான காசோலையை சேமலையப்பன் பெற்றோரிடம் வழங்கினார் .
அப்போது திருப்பூர் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ், திருப்பூர் மாநகராட்சி 4-வது மண்டல தலைவர் இல.பத்மநாபன் ஆகியோர் உடன் இருந்தனர்.
மேலும் உயிரிழந்த சேமலையப்பனுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி தனியார் பள்ளியில் நடை பெற்றது. இதில் ஆசிரி யர்கள், மாணவர்கள் கலந்து கொண்டு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர்.
சேமலையப்பன் குடும்ப த்தினர் கூறுகையில், 20 குழந்தைகளின் உயிரை காப்பாற்றி எங்களது குடும்பத்திற்கு நல்ல பெயரை வாங்கி கொடுத்துள்ளார் என்றனர்.
இறந்துபோன சேமலையப்பனுக்கு லலிதா என்ற மனைவியும், ஹரிஹரன் (17), ஹரிணி (15) என்ற 2 குழந்தைகளும் உள்ளனர். லலிதா சேமலையப்பன் வேலை பார்த்த தனியார் பள்ளியிலேயே வேலை பார்த்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.