போக்குவரத்து விதிமீறலில் ஈடுபடாத வாகன உரிமையாளர்கள் அபராதத்தில் இருந்து விலக்கு பெறலாம்
- சென்னையில் மாநகர சாலைகளில் பல இடங்களில் கண்காணிப்பு கேமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளது.
- வாகன எண் மூலம் சம்பந்தப்பட்ட வாகன உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு செலான்கள் அனுப்பப்படுகிறது.
சென்னை:
விபத்துகளை குறைக்கவும், போக்குவரத்து விதி மீறலில் ஈடுபடுபவர்களை கண்காணித்து நடவடிக்கை எடுக்கவும் போக்குவரத்து போலீசார் பல்வேறு நட வடிக்கைகளை எடுத்து வருகிறார்கள்.
சென்னையில் மாநகர சாலைகளில் பல இடங்களில் கண்காணிப்பு கேமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. இவற்றில் பதிவாகும் காட்சிகள் மூலம் வாகனங்கள் நிறுத்தும் இடங்களில் விதி மீறல், சிக்னல்களை கவனிக்காமல் செல்லும் வாகனங்கள், ஹெல்மெட் அணியாமல் செல்பவர்கள், சீட் பெல்ட் அணியாமல் செல்லும் வாகன ஓட்டிகள் என போக்குவரத்து விதிகளை மீறும் வாகன ஓட்டிகளை கண்காணிக்கப்படுகிறது.
பின்னர் அந்த வாகன எண் மூலம் சம்பந்தப்பட்ட வாகன உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு செலான்கள் அனுப்பப்படுகிறது.
இந்த முறையில் சம்பந்தப்பட்ட வாகன உரிமையாளரே விதி மீறல் செய்தவராக கருதப்படுகிறார். ஆனால் சில நேரங்களில் வாகனங்களின் உரிமையாளர்கள் அந்த வாகனத்தை ஓட்டி செல்லாமல் தங்களது நண்பர்களுக்கு கொடுக்கும் போது அவர் விதிமீறலில் ஈடுபட்டாலும், வாகன உரிமையாளரே விதிமீறல் செய்தவராக கருதப்படும் நிலை உள்ளது.
இந்நிலையில் சமீபத்தில் போக்குவரத்து திருத்த விதிகளின்படி போக்குவரத்து விதிமீறலில் ஈடுபடாத வாகனங்களின் உரிமையாளர்கள் தங்களது வாகனத்தை வேறொரு நபர் ஓட்டியதற்கான ஆதாரத்தை வழங்கி, தாங்கள் நிரபராதி என நிரூபிக்கும் வாய்ப்பை வழங்கி உள்ளது.
அதன்படி உரிய ஆதாரங்களை போலீசாரிடம் சமர்பித்தால் ஏற்கனவே போலீசார் அனுப்பிய அபராத செலான்கள் ரத்து செய்யப்பட்டு உண்மையான குற்றவாளியின் பெயரில் அவரது ஓட்டுனர் உரிம எண்ணை பயன்படுத்தி வழக்குப்பதிவு செய்யப்படும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.