பருத்தி பஞ்சுகளுடன் அணிவகுத்து நின்ற வாகனங்கள்
- விற்பனை கூடத்தில் வாரந்தோறும் பருத்தி ஏலம் நடைபெறுவது வழக்கம்.
- பருத்திகளை வைத்துக் கொண்டு நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.
கும்பகோணம்:
கும்பகோணத்தை அடுத்த கொட்டையூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் பருத்தி ஏலத்தில் தங்களது பருத்திப்பஞ்சுகளை விற்பனை செய்ய ஏராளமான விவசாயிகள் சரக்கு வாகனங்களில் பருத்தி மூட்டைகளை கொண்டு வந்து குவித்ததால் அந்த பகுதி முழுவதும் வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டிய சூழல்ஏற்பட்டது.
கொட்டையூரில் தமிழ்நாடு அரசு ஒழுங்குமுறை விற்பனை கூடம் அமைந்துள்ளது.
இந்த விற்பனை கூடத்தில் வாரந்தோறும் புதன்கிழமைகளில் பருத்தி ஏலம் நடைபெறுவது வழக்கம்.
இந்த பருத்தி ஏலத்தில் கும்பகோணம் சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான விவசாயிகள் தங்களது விவசாய நிலங்களில் பயிர் செய்யப்பட்ட பஞ்சுகளை கொண்டு வந்து மறைமுக ஏலத்தில் விற்பனை செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் நாளை (புதன்கிழமை) நடைபெற உள்ள மறைமுக ஏலத்தில் விற்பனை செய்வதற்காக நூற்றுக்கணக்கான விவசாயிகள் தங்களது விவசாய நிலத்தில் பயிர் செய்யப்பட்ட பருத்தி பஞ்சுகளை அறுவடை செய்து ஏராளமான சரக்கு வாகனங்களில் ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கு கொண்டு வந்திருந்தனர்.
ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் பருத்தி மூட்டைகளை இறக்கி வைக்க போதிய பணியாளர்கள் இல்லாததால் ஏராளமான விவசாயிகள் தாங்கள் கொண்டு வந்திருந்த பருத்திகளை சரக்கு வாகனங்களிலேயே வைத்துக் கொண்டு நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.
வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டதால் பருத்திப்பஞ்சுகள் மழையில் நனைந்து வீணாகும் அபாயம் ஏற்பட வாய்ப்பு உள்ளது இதனால் விவசாயிகள் கலக்கமடைந்தனர். பருத்தி மூட்டைகளை கையாள அதிகப்படியான பணியாளர்களை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் பணியில் ஈடுபடுத்தி விரைவாகவும் பாதுகாப்பாகவும் பருத்தி மூட்டைகளை இறக்கி வைக்கவும் பருத்திக்கு அதிகபட்ச விலை கிடைக்கவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.