ஆட்டோ தொழிலாளர்கள் கையில் திருவோடு ஏந்தி நூதன போராட்டம்
- பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர்
- மாவட்ட நிர்வாகத்திடம் மனு கொடுத்தும் நடவடிக்கை இல்லை என புகார்
வேலூர்:
வேலூர் கலெக்டர் அலுவலகம் அருகே வேலூர் மாவட்ட ஏ.ஐ.டி.யு.சி. ஆட்டோ தொழிலாளர் சங்கம் சார்பில் நெற்றியில் நாமம் போட்டு கையில் திருவோடு ஏந்தி நூதன போராட்டம் இன்று நடந்தது. போராட்டத்திற்கு மாவட்ட பொதுச் செயலாளர் சிம்புதேவன் தலைமை தாங்கினார்.
மாவட்ட தலைவர் ஆல்வின், பொருளாளர் ஏழுமலை, துணைத் தலைவர் லோகேஷ், துணை செயலாளர் மாணிக்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில துணைத்தலைவர் தேவதாஸ் சிறப்புரையாற்றினார்.
ஆட்டோ தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் வகையில் தனியார் ஆஸ்பத்திரி நிர்வாகத்தால் இயக்கப்படும் தனியார் பஸ்களின் நியமனத்தை ரத்து செய்ய வேண்டும் நோயாளிகளை ஆட்டோவில் அழைத்துச் செல்ல அனுமதி வழங்க வேண்டும். தனியார் ஆஸ்பத்திரி நிர்வாகம் மற்றும் மாவட்ட நிர்வாகத்திடம் மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்காததை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.
இதையடுத்து அந்த வழியாக வந்த ஆட்டோ மற்றும் வாகன ஓட்டுனர்களிடம் ஆட்டோ தொழிலாளர்கள் திருவோடு ஏந்தி பிச்சை எடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.