ரூ.15 லட்சம் மதிப்பில் கழிவுநீர் கால்வாய்
- 23 வீடுகள் சுவர் இடிப்பு
- கலெக்டர் உத்தரவு
வேலூர்,
வேலூர் மக்கான் அம்பேத்கர் நகர் பகுதியில் மழைக்காலங்களில் மழை நீர் செல்ல வழி இல்லாத நிலை உள்ளது. இதனால் கழிவு நீரோடு மழை நீர் சேர்ந்து அந்த பகுதியில் தேங்கியது.
அங்கு கழிவுநீர் கால்வாய் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க கலெக்டர் குமாரவேல் பாண்டியன் உத்தரவிட்டார். இதை யடுத்து மாநகராட்சி செயற்பொறியாளர் கண்ணன், இளநிலை பொறியாளர் சீனிவாசன் ஆகியோர் தலைமையில் மாநகராட்சி ஊழியர்கள் இன்று காலை ஆக்கிரமிப்பு அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.
பொக்லைன் எந்திரம் மூலம் கால்வாய் மீது கட்டப்பட்டுள்ள ஆக்கிரமிப்பு வீடுகள் சில வீடுகளில் பாதி பகுதிகள் இடித்து அகற்றப்பட்டன.
இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது, அம்பேத்கர் நகர் பகுதியில் மெயின் தெருவில் இருபுறமும் கழிவுநீர் கால்வாய் சுமார் ரூ.15 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட உள்ளது.
இதற்காக அந்த பகுதியில் கழிவு நீர் கால்வாய் மீது கட்டப்பட்டுள்ள ஆக்கிரமப்புகள் அகற்றப்பட்டது.
சுமார் 23 வீடுகளின் ஆக்கிரமிப்பு அகற்றி உள்ளோம். விரைவில் கழிவுநீர் கால்வாய் கட்டப்படும் என்றனர்.