மின்மாற்றி பழுதால் விவசாயிகள் அவதி
- 15 நாட்களாக நீர் பாசனம் செய்ய முடியாவில்லை
- ஆலோசனை செய்த பிறகே நடவடிக்கை
வேலூர்:
வேலூர் மாவட்டம், ஓட்டேரி அடுத்த வானியன்குளம் பகுதியில் சுமார் 50-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. விவசாய நிலங்கள் அதிகம் காணப்படும் இந்த பகுதியில் நெல், சேம்பு, கருணை, மஞ்சள், கடலை, கத்தரி மற்றும் வெண்டை உள்ளிட்ட பயிர் வகைகள் விவசாயம் செய்யப்படுகிறது.
இந்த நிலையில் இறுதி ஊர்வல பூ பல்லக்கு மின் கம்பியின் மீது உரசியது. இதனால் அந்த பகுதியில் உள்ள டிரான்ஸ்பார்மரின் மின்மாற்றியில் பழுது ஏற்பட்டுள்ளது.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற மின்வாரிய அதிகாரிகள், வீடுகளுக்கு மட்டும் மின் இணைப்பு கிடைக்கும்படி மின் மாற்றியை தற்காலிகமாக சரி செய்துள்ளனர்.
இதனால் விவசாய நீர் பாசன மின் இணைப்பில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அதன்படி கடந்த 15 நாட்களாக அந்த பகுதியில் உள்ள விவசாயிகளில் நீர் பாசனம் செய்ய முடியாமல் அவதிப்படுகின்றனர். இதனால் பயிர்கள் வாடி வதங்கி கருகிப்போக தொடங்கியுள்ளது.
இதனால் விவசாயிகள் மிகவும் கவலை அடைந்துள்ளனர். இது குறித்து அந்த பகுதி மக்கள் மின்வாரிய அதிகாரிகளிடம் கேட்டபோது, 'மின்மாற்றியில் கோளாறு ஏற்பட்டு உள்ளது. அதிகாரிகளிடம் கலந்து ஆலோசனை செய்த பிறகே நடவடிக்கை எடுக்கப்படும்' என கூறினர்.