உள்ளூர் செய்திகள்

பஸ்சில் மாணவர்கள் தொங்கி செல்வதை தடுக்க நடவடிக்கை

Published On 2023-09-01 08:17 GMT   |   Update On 2023-09-01 08:17 GMT
  • வேலூர் போலீஸ் சூப்பிரண்டு அதிரடி உத்தரவு
  • புதிய பஸ் நிலையத்தில் போக்குவரத்து மாற்றம்

வேலூர்:

வேலூர் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில், பள்ளி மாணவர்கள் பஸ் படிக்கட்டில் பயணம் செய்வதை தவிர்ப்பது குறித்து ஆலோசனை கூட்டம் இன்று நடந்தது. வேலூர் போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் தலைமை தாங்கினார்.

இதில் அரசு போக்குவரத்து கழக பொது மேலாளர் பொண்ணுபாண்டி, துணை போலீஸ் சூப்பிரண்டுகள் திருநாவுக்கரசு, பழனி, ராமமூர்த்தி உள்ளிட்ட போலீசார் மற்றும் தனியார் பஸ் உரிமையாளர்கள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் பேசியதாவது:-

மாணவர்கள் பஸ் படிக்கட்டில் செய்வதால் அதிக விபத்து மற்றும் உயிரிழப்புகள் ஏற்படுகிறது. அதனை தடுக்க பள்ளி நாட்களில் காலை மற்றும் மாலை நேரங்களில் அதிக அளவில் அரசு பஸ்களை இயக்க வேண்டும்.

படிக்கட்டில் மாணவர்கள் தொங்கியபடி பயணம் செய்வதை தட்டி கேட்கும் போது, டிரைவர், கண்டக்டர்களுடன் மாணவர்கள் தகராறில் ஈடுபடுகின்றனர். அது குறித்து உடனடியாக டிரைவர்கள் போலீசில் புகார் செய்ய வேண்டும்.

மாணவர்கள் பஸ்சில் அதிகம் ஏறும் இடங்களான வேலூர் புதிய பஸ் நிலையம், பழைய பஸ் நிலையம், காட்பாடி, குடியாத்தம், பள்ளிகொண்டா, பாகாயம், தொரப்பாடி, ஒடுகத்தூர் உள்ளிட்ட இடங்களில் கூடுதலான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு, மாணவர்கள் பஸ் படிக்கட்டில் பயணம் செய்வதை தவிர்க்க வேண்டும். பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

பள்ளிகள், பஸ் நிலையம் மற்றும் பொது இடங்களில் விழிப்புணர்வு ஸ்டிக்கர்கள் ஒட்ட வேண்டும். புதிய பஸ் நிலையத்தில் குறிப்பிட்ட நாட்களில் பயணிகள் கூட்டம் அதிகமாக சேரும்போது செல்போன் பறிப்பு, நகை பறிப்பு போன்ற சம்பவங்கள் நடக்கிறது.

அதனை தடுக்க போலீசார் புதிய மற்றும் பழைய பஸ் நிலையங்களில் அடிக்கடி தொடர்ந்து ரோந்து பணியில் ஈடுபட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

வேலூர் எஸ்.பி. அலுவலகத்தில் நடந்த கூட்டத்தில் பஸ் உரிமையாளர்கள் பேசுகையில்:-

வேலூர் புதிய பஸ் நிலையத்தில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் மொத்தம் 36 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது.

அதில் ஒரு கேமரா கூட தற்போது வேலை செய்யவில்லை. பழைய பஸ் நிலையத்தில் ஆட்டோக்கள் ஆங்காங்கே நிறுத்தப்படுவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. அதனை தடுக்க போலீசார் ஆட்டோக்களை முறைப்படுத்த வேண்டும்.

ஆந்திரா மற்றும் சித்தூரில் இருந்து வரும் பஸ்கள் கிரீன் சர்கிள் வழியாக வந்து முத்து மண்டபம் அருகே உள்ள நுழைவாயில் வழியாக புதிய பஸ் நிலையத்திற்குள் செல்ல வேண்டும்.

ஆனால் அந்த பஸ்கள் செல்லியம்மன் கோவில் வழியாக எதிர் திசையில் வந்து பஸ் நிலையத்திற்குள் நுழைகின்றன. இதனால் போக்குவரத்து நெரிசல் அதிக அளவில் ஏற்படுகிறது என குற்றம் சாட்டினர்.

இதற்கு பதில் அளித்த போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன், நாளை முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்படும் என்று கூறினார்.

Tags:    

Similar News