உள்ளூர் செய்திகள்

கழிவுநீர் குளம்போல் தேங்கி நிற்பதால் சுகாதார சீர்கேடு

Published On 2023-08-13 09:03 GMT   |   Update On 2023-08-13 09:03 GMT
  • ஏரி கால்வாயில் ெகாண்டு செல்ல திட்டம்
  • நோய் தொற்றுகள் ஏற்படும் அபாயம்

வேலூர்:

வேலூர் மாவட்டம், குடியாத்தம், நெல்லூர்பேட்டை ஊராட்சி லிங்குன்றம் அடுத்த கணபதி நகரில் சுமார் 200 வீடுகள் உள்ளன. இங்குள்ள மக்களின் வசதிக்காக தெருக்களின் ஓரம் கழிவுநீர் கால்வாய் கட்டப்பட்டு உள்ளது.

குடியிருப்புகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் கால்வாய் மூலம், மோர்தானா அணையில் இருந்து நெல்லூர் பேட்டை பெரிய ஏரிக்கு மழைநீர் செல்லும் கால்வாயில் ெகாண்டு செல்ல திட்டமிடப்பட்டது.

இதற்காக தற்போது குடியாத்தம்- பேரணாம்பட்டு சாலையின் ஓரத்தில் செல்லும் மழைநீர் கால்வாயில், கழிவுநீர் செல்ல கால்வாய் கட்டப்பட்டது. பல்வேறு காரணங்களால் அந்த கால்வாய் பணி முழுமையடையாமல் பாதியிலேயே நிறுத்தப்பட்டது.

தற்போது அந்த கால்வாயில் வரும் கழிவுநீர், பாதியில் கால்வாய் கட்டிடம் நிறுத்தப்பட்ட இடத்தில் இருந்து செல்ல வழியில்லாமல் அதிகளவில் குளம்போல் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது. இதனால் அந்த வழியாக செல்லும் பொதுமக்கள் மூக்கை பிடித்தபடியே செல்கின்றனர்.

பல நாட்களாக தேங்கிநிற்கும் கழிவுநீரில் கொசக்களின் உற்பத்தி அதிகரித்து, சுகாதார சீர்க்கேட்டை ஏற்படுத்துவதுடன், டெங்கு, மலேரியா உள்ளிட்ட நோய் தொற்றுகள் ஏற்படும் அபாயம் உள்ளது.

இதுகுறித்து அந்த பகுதி மக்கள் கூறியதாவது:-

பொதுமக்களின் வசதிக்காக கடந்த 3 ஆண்டுக்கு முன்பு குடியிருப்பு பகுதியில் மட்டும் கழிவுநீர் கால்வாய் கட்டப்பட்டது.

இதனைத்தொடர்ந்து 2-ம் கட்டமாக குடியிருப்பில் இருந்து நெல்லூர்பேட்டை பெரிய ஏரிக்கு கழிவுநீர் எடுத்துசெல்ல கடந்த 2 மாதத்திற்கு முன்பு கால்வாய் விரிவாக்கம் செய்யப்பட்டது.

அந்த பணியும் முழுமையாக முடியாததால், கழிநீர் குளம்போல் தேங்கி கொசு உற்பத்தி நாளுக்கு நாள் அதிகரிக்கிறது.

இரவு நேரத்தில் கொசுக்கள் துரத்தி, துரத்தி கடிப்பதால் நாங்கள் தூக்கத்தை இழந்து தவிக்கிறோம். மாலையில் கொசுக்கள் தொல்லை அதிகாம இருப்பதால் நாங்கள் வெளியே வராமல் வீட்டிற்குள்ளேயே முடங்கி கிடக்கும் சூழல் நிலவி வருகிறது.

கழிவுநீர் தேங்கி நிற்கும் இடத்தில் இருக்கும் விவசாய நிலங்கள் அதிகளவில் பாதிப்படைகிறது. மழை காலங்களில், ஏரிக்கு வரும் மழைநீர் கழிவுநீரோடு கலந்து, விவசாய நிலத்தில் தேங்கி பயிர்களை நாசம் செய்கிறது. இதனால் மழை காலங்களில் விவசாயம் செய்யமுடியாத நிலை ஏற்படுகிறது.

எனவே மக்களின் நலன் கருதி கால்வாய் கட்டும் பணியை முழுமையாக செய்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு தெரிவித்தனர்.

Tags:    

Similar News