இறால் பண்ணையில் பூட்டை உடைத்து ரூ.5 லட்சம் பொருட்கள் திருட்டு
- போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டு மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
- இரவு நேரங்களில் காவலர்கள் ரோந்து பணி மேற்கொள்ள வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டனர்.
நாகப்பட்டினம்:
நாகப்பட்டினம் அருகே வெளிப்பாளையத்தை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன். இவர் செருதூர் பாலத்தடி அருகில் இறால் பண்ணை வைத்துள்ளார்.
இந்நிலையில், சம்பவத்தன்று இவர் வழக்கம்போல் இறால் பண்ணையை வந்து பார்த்துள்ளார். அப்போது பண்ணையின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் உள்ளே சென்று பாாத்துள்ளார். அப்போது பண்ணையில் இருந்த ஏரேட்டர் மோட்டார், ஜெனரேட்டர் பேட்டரி, ஏரேட்டர் கேபிள், போக்கஸ் லைட் உள்ளிட்ட சுமார் ரூ.5 லட்சம் மதிப்பிலான பொருட்கள் திருடப்பட்டிருந்தது தெரியவந்தது.
உடனடியாக இதுகுறித்து ராதாகிருஷ்ணன் கீழையூர் போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டு மர்ம நபர்களை தேடி வருகின்றனர். மேலும், கைரேகை நிபுணர்களும் வரவழைக்கப்பட்டு ஆய்வு செய்தனர்.
இதுகுறித்து இறால் பண்ணை உரிமையாளர்கள் கூறுகையில்:-
இந்த பகுதிகளில் உள்ள இறால் பண்ணைகளில் தொடர் திருட்டு நடைபெறுவதாகவும், இதனால் தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகவும் தெரிவித்தனர். இதனை தடுக்கும் பொருட்டு இரவு நேரங்களில் காவலர்கள் ரோந்து பணி மேற்கொள்ள வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டனர்.
மேலும், இப்பகுதியில் சி.சி.டி.வி. கேமரா அமைக்க வேண்டும் என தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.