விக்கிரவாண்டி இடைத்தேர்தல் புறக்கணிப்பு: அ.தி.மு.க., தே.மு.தி.க. வாக்குகள் பா.ம.க.வுக்கு கிடைக்குமா?
- ஓட்டுகள் பா.ம.க. வேட்பாளருக்கு கிடைக்கும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.
- தி.மு.க.வுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தலாம்.
சென்னை:
விக்கிரவாண்டி தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த புகழேந்தி (தி.மு.க.) மரணம் அடைந்ததை தொடர்ந்து அந்த தொகுதிக்கு அடுத்த மாதம் 10-ந்தேதி இடைத்தேர்தல் நடக்கிறது.
இந்த தேர்தலில் தி.மு.க. வேட்பாளராக அன்னியூர் சிவா அறிவிக்கப்பட்டு உள்ளார்.
பா.ஜனதா கூட்டணியில் இடம் பெற்றுள்ள பா.ம.க.வும் இந்த தேர்தலில் போட்டியிடுகிறது. பா.ம.க. மாநில துணைத் தலைவர் சி.அன்புமணி வேட்பாளராக நிறுத்தப்பட்டு உள்ளார். நாம் தமிழர் கட்சி வேட்பாளராக டாக்டர் அபிநயா நிற்கிறார்.
இந்த இடைத் தேர்தலில் அ.தி.மு.க. போட்டியிடும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தேர்தலை புறக்கணிப்பதாக அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துவிட்டார்.
ஆளும் தி.மு.க. அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்யும் என்பதால் தேர்தலில் அ.தி.மு.க. போட்டியிடவில்லை என்று விரிவாக விளக்கம் அளித்துள்ளார்.
அ.தி.மு.க.வை தொடர்ந்து அதன் கூட்டணி கட்சியான தே.மு.தி.க.வும் இடைத்தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளது.
இது தொடர்பாக தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கூறுகையில், `ஆட்சியாளர்களின் அதிகாரத்தால் தேர்தல்கள் தவறாக நடத்தப்படுகிறது. தொண்டர்களின் உைழப்பு, நேரம், பணம் என அனைத்தையும் விரயம் செய்ய விரும்பவில்லை.
எனவே விக்கிரவாண்டி இடைத்தேர்தலை தே.மு.தி.க. புறக்கணிக்கிறது என்று கூறிவிட்டார். விக்கிர வாண்டி இடைத் தேர்தலை பிரதான எதிர்க் கட்சியான அ.தி.மு.க. புறக்கணித்து உள்ளதால் பா.ம.க. தலை வர்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். காரணம் அ.தி.மு.க. ஓட்டுகள் இம்முறை பா.ம.க.வுக்கு கிடைத்துவிடும் என்ற நம்பிககையில் உள்ளனர்.
இந்த தொகுதியை பொறுத்தவரையில், தி.மு.க. அ.தி.மு.க. சம பலத்துடன் உள்ளன. நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் விக்கிரவாண்டி தொகுதியில் வெற்றி பெற்ற விடுதலை சிறுத்தைகள் கட்சி பானை சின்னத்தில் தி.மு.க. ஆதரவுடன் 39.57 சதவீத ஓட்டுக்களை பெற்றது. அ.தி.மு.க. 35.83 சதவீதம், பா.ம.க. 17.64 சதவீதம், நாம் தமிழர் கட்சி 4.57 சதவீத வாக்குகளையும் பெற்றுள்ளது.
அதாவது பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் போட்டியிட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியை விட 3.7 சதவீதம் மட்டுமே அ.தி.மு.க. குறைவாக பெற்றுள்ளது.
எனவே இப்போது இடைத்தேர்தலில் அ.தி.மு.க. போட்டியிடவில்லை என்று அறிவித்துள்ள நிலையில் அக்கட்சியின் ஓட்டுகள் பா.ம.க. வேட்பாளருக்கு கிடைக்கும் என்ற நம்பிக்கை அவர்களுக்கு ஏற்பட்டுள்ளது.
1996க்கு பிறகு தமிழ கத்தில் பெரும்பாலான இடைத் தேர்தல்களில் ஆளும் கட்சியே வெற்றி பெறுவது நடைமுறையில் இருந்து வருகிறது. இருப்பினும் விக்கிரவாண்டி தொகுதியில் அ.தி.மு.க., தே.மு.தி.க. வாக்குகள் ஒட்டு மொத்தமாக பா.ம.க. வேட்பாளருக்கு சென்றால் அது தி.மு.க.வுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தலாம் என்று பேசப்படுகிறது.
பா.ம.க. வேட்பாளரை ஆதரிப்பதற்காகவே அ.தி.மு.க., தே.மு.தி.க. மறைமுக மாக தேர்தல் புறக்கணிப்பு செய்துள்ளதாக தி.மு.க. வினர் கூறி வருகின்றனர். அ.தி.மு.க., தே.மு.தி.க. ஓட்டுகள் அவ்வாறு ஒருசேர பா.ம.க.வுக்கு செல்லாமல் தடுப்பதற்கு இப்போதே தி.மு.க. தேர்தல் வியூகம் வகுக்க தொடங்கி உள்ளது.
அங்கு தேர்தல் பணி யாற்றுவதற்காக ஒன்றியம் வாயிலாக 9 அமைச்சர்களை தேர்தல் பொறுப்பாளர் களாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நியமித்து உள்ளார்.
ஒவ்வொரு அமைச்ச ருக்கும் 20 ஆயிரம் ஓட்டுகள் ஒதுக்கப்பட்டுள்ளதால் அவர்கள் அங்கு வீடு எடுத்து தங்கி ஊழியர் கூட்டங்களை நடத்தி வருகின்றனர். ஒவ்வொரு தெருவிலும் உள்ள ஓட்டுக்களை கவனித்து யார்-யாரை நியமிக்க வேண்டும் என்ற பட்டியலும் தயார் செய்து வைத்துள்ளனர்.
இடைத் தேர்தலில் போட்டியிடாமல் அ.தி.மு.க. ஒதுங்கியதற்கு பா.ஜனதா வுடன் இருக்கும் மறைமுக உறவு தான் காரணம் என காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் விமர்சித்து உள்ள நிலையில் தி.மு.க. இந்த தேர்தலில் கடுமையாக உழைக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டு உள்ளது.
ஏனென்றால் பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க., அ.தி.மு.க. இடையிலான ஓட்டு வித்தியாசம் மிக குறைவாகவே உள்ளது. தி.மு.க. (வி.சி.க.) 72,188 ஓட்டுகளும், அ.தி.மு.க. 65,365 ஓட்டுகளும் பா.ஜனதா 32,198 ஓட்டுகளும் பெற்றுள்ளன.
4 முனை போட்டி நிலவினால் ஓட்டுகள் பிரிந்து எளிதில் தி.மு.க. வெற்றி பெற்று விடும் என்று கருதப்பட்ட நிலையில் இப்போது தி.மு.க., பா.ம.க. நாம் தமிழர் கட்சி இடையே மும்முனைப் போட்டி தான் ஏற்பட்டு உள்ளது.
இதனால் அ.தி.மு.க., தே.மு.தி.க. ஓட்டுகள் பா.ம.க.வுக்கு தான் செல்லும் என்று பலரும் கணித்து வருகின்றனர். இதெல்லாம் மறைமுக காரணமாக இருக்கும் என்று அ.தி.மு.க. தொண்டர்களும் பேசி வருகின்றனர்.
விழுப்புரம் மாவட்டத்தை பொறுத்தவரை முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகத்துக்கு தனி செல்வாக்கு உண்டு. அப்படிப்பட்ட நிலையில் அவரே தேர்தலை சந்திக்காமல் புறக்கணிக்கும் ஆலோசனையை கட்சி மேலிடத்திற்கு வழங்கி இருக்கிறார் என்றால் இதில் ஏதோ உள்குத்து இருக்கும் என்று கட்சி நிர்வாகிகள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இதன் காரணமாக தி.மு.க. இந்த தேர்தலில் தான் தன் செல்வாக்கை நிலைநிறுத்த கடுமையாக போராட வேண்டி இருக்கும். இதற்காக 9 அமைச்சர்கள் தலைமையில் தமிழ்நாடு முழுவதும் இருந்து தி.மு.க.வினர் தேர்தல் பணியாற்ற விக்கிரவாண்டிக்கு செல்ல தயாராகி வருகின்றனர்.