உள்ளூர் செய்திகள்

ஊராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய கிராம மக்களிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியதை படத்தில் காணலாம்.

சம்பளம் வழங்காததை கண்டித்து பஞ்சாயத்து அலுவலகத்தை முற்றுகையிட்ட கிராம மக்கள்: அதிகாரிகள் பேச்சுவார்த்தை

Published On 2023-04-21 08:48 GMT   |   Update On 2023-04-21 09:39 GMT
  • 100 நாள் வேலை செய்யும் பொதுமக்களுக்கு கூலி தொகை கடந்த 3 மாத காலமாக சரிவர வங்கி கணக்கில் வரவு வைக்கவில்லை
  • திருக்கோவிலூர் வேட்டவலம் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கள்ளக்குறிச்சி:

திருக்கோவிலூர் அருகே உள்ள கண்டாச்சிபுரம் தாலுக்கா வீரபாண்டி கிராமத்தில் 100 நாள் வேலை செய்யும் பொது மக்களுக்கு கூலி தொகை கடந்த 3 மாத காலமாக சரி வர வங்கி கணக்கில் வரவு வைக்காததை கண்டித்தும், இந்த விஷயத்தில் அலட்சியம் காட்டும் ஊராட்சி மன்ற தலைவரை கண்டித்தும், வங்கி கணக்கில் பணம் எடுக்கும் போது பொதுமக்களிடம் ஆயிரம் ரூபாய்க்கு ரூ. 20 கமிஷன் கேட்கும் வங்கி ஊழியரை கண்டித்தும் 300-க்கும் மேற்பட்டோர் திருக்கோவிலூர் வேட்டவலம் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து ஊராட்சி மன்ற அலுவலகத்தில் இருந்த ஊராட்சி மன்ற தலைவரை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.  இதுகுறித்து தகவல் அறிந்த கண்டாச்சிபுரம் தாசில்தார் கற்பகம், முகையூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சண்முகம் மற்றும் நாராயணன், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் அரிகரசுதன் ஆகியோர் பொது மக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.

இதில் பொதுமக்கள் தரப்பில் ஊராட்சி நிர்வாகத்தை கடுமையாக குற்றம் சாட்டியதுடன், பொது மக்களின் வங்கி கணக்குகளில் ஆதார் அட்டை முறையாக இணைக்கப் படவில்லை எனக் கூறும் தனியார் வங்கியின் அலட்சிய போக்கை கடுமையாக கண்டித்து பேசினார்கள். மேலும் வீரபாண்டி கிராமத்தில் உள்ள தனியார் வங்கியின் சேவை மிகவும் குறைவாக இருப்பதாகவும் தேசிய மயமாக்கப்பட்ட வங்கியின் கிளையை வீர பாண்டி கிராமத்தில் தொடங்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர். பொதுமக்கள் கூறிய அனைத்து கோரிக்கைகளையும் கேட்டறிந்த அதிகாரிகள் குழுவினர் வருகின்ற 24-ந்தேதி முதல் வீரபாண்டி புலிக்கல், ஒட்டம்பட்டு, அருணாபுரம் கல்லந்தல் மற்றும் தண்டரை ஆகிய கிராமங்களைச் சேர்ந்த பொது மக்களுக்கு வங்கி கணக்கில் ஆதார் அட்டை இணைக்கும் சிறப்பு முகாம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது. பொதுமக்கள் தங்கள் கூலித் தொகையை வங்கிக் கணக்கில் இருந்து எடுக்கும் பொழுது கமிஷன் கேட்கும் வங்கி ஊழியரை கண்டிக்க வேண்டும் என்றும் தனியார் வங்கி நிர்வாகத்திடம் கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து பொதுமக்கள் கலைந்து சென்றனர். ஷஇந்த சாலை மறியல் போராட்டம் மற்றும் முற்றுகை போராட்டத்தால் வீரபாண்டி கிராமத்தில் 2 மணி நேரம் பதட்டமான நிலை காணப்பட்டது. தகவல் அறிந்த அரகண்டநல்லூர் போலீசார் விரைந்து வந்து அசம்பாவிதம் ஏதும் நடைபெறாமல் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Tags:    

Similar News