கோவிலுக்கு சொந்தமான பாதை அடைக்கப்பட்டதால் கிராம மக்கள், வியாபாரிகள் கடையடைப்பு போராட்டம்
- கோவிலுக்கு தேனி பிரதான சாலையில் இருந்து பாதை உள்ளது.
- சாலைகள் அனைத்தும் வெறிச்சோடி காணப்பட்டது.
வருசநாடு:
தேனி மாவட்டம் கடமலைக்குண்டு கிராமத்தின் மூலவைகை ஆற்றங்கரை ஓரத்தில் பாண்டியர் காலத்தில் கட்டப்பட்ட பழமையான ஈஸ்வரன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு தேனி பிரதான சாலையில் இருந்து பாதை உள்ளது. இந்த பாதையை பல நூற்றாண்டு காலமாக கோவிலுக்கு செல்லும் பொதுமக்கள் பயன்படுத்தி வந்தனர்.
இந்நிலையில் கடந்த 2 வாரங்களுக்கு முன்பு கடமலைக்குண்டுவை சேர்ந்த தனிநபர் கோவிலுக்கு செல்லும் பாதையை முள்வேலி மூலம் அடைத்தார். இது தொடர்பாக கடமலைக்குண்டு கிராம கமிட்டியினர் சம்பந்தப்பட்ட தனிநபரிடம் கேட்டபோது அந்தப்பாதை தன்னுடைய பட்டா நிலத்தில் வருவதாக தெரிவித்துள்ளார்.
மேலும் முள்வேலியை அகற்ற முடியாது என திட்டவட்டமாக மறுத்துவிட்டார். இது தொடர்பாக கிராம கமிட்டியினர் கடமலைக்குண்டு போலீஸ் நிலையத்திலும், தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்திலும் புகார் மனுக்கள் அளித்தனர். ஆனால் முள்வேலியை அகற்ற எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. கடமலைக்குண்டு போலீஸ் நிலையத்தில் ஆண்டிபட்டி தாசில்தார் தலைமையில் சம்பந்தப்பட்ட தனிநபர் மற்றும் கிராம கமிட்டியினர் இடையே பேச்சுவார்த்தை நடந்தது.
இதில் எந்த முடிவும் எட்டப்படவில்லை. இதையடுத்து கோவில் பாதை அடைக்கப்பட்டதை கண்டித்து கடமலைக்குண்டு கிராமத்தினர் கடையடைப்பு அறவழி பொது வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி காலை 8 மணிக்கு அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டது. இதனால் சாலைகள் அனைத்தும் வெறிச்சோடி காணப்பட்டது. முள்வேலியை அகற்ற நடவடிக்கை எடுக்காவிட்டால் அடுத்தடுத்து தொடர் போராட்டங்கள் நடைபெறும் என கிராம மக்கள் தெரிவித்தனர். இதனால் கடமலைக்குண்டு கிராமத்தில் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.