உள்ளூர் செய்திகள்

விம்கோ நகர்-சுங்கசாவடி இடையே மெட்ரோ ரெயில் சேவை பாதிப்பு- 4 மணி நேரம் ரெயில்கள் ஓடாததால் பயணிகள் தவிப்பு

Published On 2023-07-17 05:34 GMT   |   Update On 2023-07-17 05:34 GMT
  • திடீரென மின் வினியோகத்தில் பாதிப்பு ஏற்பட்டதால் மெட்ரோ ரெயில்களை இயக்க முடியாமல் போனது.
  • விம்கோ நகர் நிலையத்தில் இருந்து சுங்கச்சாவடி நிலையம் வரை ஒரு வழிப்பாதையில் மட்டும் ரெயில்கள் இயக்கப்பட்டன.

சென்னை:

சென்னையில் 2 வழித்தடங்களில் மெட்ரோ ரெயில் சேவை இயக்கப்பட்டு வருகிறது. அதிகாலை 5 மணி முதல் இரவு 11.30 மணி வரை இயக்கப்பட்டு வருவதால் பொதுமக்கள் போக்கு வரத்து நெரிசலில் சிக்காமல் நிம்மதியுடன் பயணம் செய்து வருகிறார்கள்.

இந்நிலையில் இன்று அதிகாலை 5.45 மணியளவில் விம்கோ நகர் மெட்ரோ நிலையம் மற்றும் விம்கோநகர் டெப்போ நிலையம் இடையே மின்வினியோகத்தில் தடை ஏற்பட்டது. இதனால் மெட்ரோ ரெயில்களை இயக்க முடியாத நிலை ஏற்பட்டது.

விம்கோ நகர் பணிமனை மெட்ரோ நிலையம் தான் கடைசியாகும். திடீரென மின் வினியோகத்தில் பாதிப்பு ஏற்பட்டதால் மெட்ரோ ரெயில்களை இயக்க முடியாமல் போனது.

இதனால் விம்கோ நகர் பணிமனை நிலையம்-விம்கோ நகர் இடையே மெட்ரோ ரெயில் சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

விம்கோ நகர் நிலையத்தில் இருந்து சுங்கச்சாவடி நிலையம் வரை ஒரு வழிப்பாதையில் மட்டும் ரெயில்கள் இயக்கப்பட்டன. மற்றொரு பாதையில் சேவை நடைபெறாது என மெட்ரோ ரெயில் நிர்வாகம் அறிவித்தது. 18 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரெயில்கள் அங்கிருந்து இயக்கப்பட்டன.

மெட்ரோ ரெயில்கள் காலை அலுவலக நேரங்களில் 10 நிமிடத்திற்கு ஒரு சேவை வீதம் இயக்கப்படும். ஆனால் மின்சார தொழில் நுட்ப கோளாறால் குறைந்த அளவில் அதிக இடை வெளியில் ரெயில்கள் இயக்கப்பட்டன. இதனால் மெட்ரோ ரெயில் நிலையங்களில் பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்தது.

விம்கோ நகர் நிலையத்தில் இருந்து திருவொற்றியூர், தேரடி, காலடிப்பேட்டை சுங்கச்சாவடி நிலையம் வரை ஒரு வழிப்பாதையில் ரெயில்கள் இயக்கப்பட்டன.

இதனால் வட சென்னை பகுதியில் இருந்து சென்ட்ரல், கோயம்பேடு, வடபழனி, அசோக்நகர் மற்றும் தேனாம்பேட்டை, சைதாப்பேட்டை, கிண்டி, விமான நிலையம் செல்பவர்கள் பெரும் சிரமத்திற்கு ஆளானார்கள்.

இதற்கிடையில் மின் வினியோக கோளாறை சரி செய்யும் பணியில் தொழில் நுட்ப பணியாளர்கள் ஈடுபட்டனர். ஆனாலும் அதனை சரி செய்து இயல்பான சேவையை தொடங்க 4 மணி நேரம் நீடித்தது. காலை 9.30 மணி முதல் போக்குவரத்து சீரானது.

Tags:    

Similar News