உள்ளூர் செய்திகள்

ரூ.16 கோடியில் புதிய பஸ் நிலையம்

Published On 2023-04-02 09:14 GMT   |   Update On 2023-04-02 09:14 GMT
  • ஸ்ரீவில்லிபுத்தூரில் ரூ.16 கோடியில் புதிய பஸ் நிலையம் நவீன வசதிகளுடன் கட்ட ஏற்பாடு நடக்கிறது.
  • மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

ஸ்ரீவில்லிபுத்தூர்

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சியில் கடந்த 1985-ம் ஆண்டு 2 ஏக்கர் பரப்பளவில் 16 பேருந்துகள் நிறுத்தும் வகையில் பஸ் நிலையம் அமைக்கப்பட்டது. தற்போது மக்கள் தொகை அதிகரித்துவிட்ட நிலையில் இடநெருக்கடி ஏற்பட்டது. மேலும் பஸ் நிலையத்தில் வாகன காப்பகம், காத்திருப்பு அறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாததால் மக்கள் சிரமப்பட்டு வருகின்றனர்.

மதுரை-கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் ஸ்ரீவில்லிபுத்தூர் உள்ளதால் மதுரை, சென்னை, மூணாறு, திண்டுக்கல், கொல்லம், தென்காசி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் பஸ்கள் ஸ்ரீவில்லிபுத்தூர் பஸ் நிலையம் வந்து செல்கின்றன. ராஜாஜி சாலை, சின்னக்கடை பஜார், அரசு மருத்துவமனை, பென்னிங்க்டன் மார்க்கெட் உள்ளிட்ட நகர் பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.

இதனால் நகரின் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் பஸ் நிலையத்தை இடமாற்றம் செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

இந்நிலையில் நடப்பு சட்டப்பேரவை கூட்ட தொடரில் ஸ்ரீவில்லிபுத்தூர், திருவாரூர் உள்ளிட்ட 9 நகராட்சிகள் மற்றும் திண்டுக்கல் உள்ளிட்ட 3 மாநகராட்சிகளில் ரூ.174 கோடியில் புதிய பஸ் நிலையங்கள் அமைக்கப்படும் என மானிய கோரிக்கையின் போது அமைச்சர் கே.என் நேரு தெரிவித்தார்.

இதையடுத்து ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட நீதிமன்றம் அருகே மதுரை-கொல்லம் நான்கு வழிச்சாலை அருகே புதிய பஸ் நிலையம் அமைப்பதற்காக 3.5ஏக்கர் இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. ரூ.16கோடி மதிப்பீட்டில் புதிய பஸ் நிலையம் அமையவுள்ளது. இங்கு 36 பஸ்களை நிறுத்துவதற்கு வசதி செய்யப்படுகிறது, மேலும் கடைகள், வாகன நிறுத்துமிடம், சுகாதார வளாகம், காத்திருப்பு அறை உள்ளிட்ட பயணிகளுக்கான நவீன வசதிகள் ஏற்படுத்தப்பட உள்ளது.

மாவட்ட நீதிமன்றம், நான்கு வழிச்சாலை, ரயில் நிலையம் ஆகியவற்றிற்கு அருகே புதிய பேருந்து நிலையம் அமைய உள்ளதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Tags:    

Similar News