அ.தி.மு.க. அரசின் அனைத்து திட்டங்களும் முடக்கப்பட்டுள்ளது - கே.டி.ராஜேந்திரபாலாஜி
- அ.தி.மு.க. அரசின் அனைத்து திட்டங்களும் முடக்கப்பட்டுள்ளதாக முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி குற்றம் சாட்டினார்.
- அ.தி.மு.க.வை மீண்டும் ஆட்சியில் அமர்த்த வேண்டும்.
சிவகாசி,
முன்னாள் முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆரின் 106-வது பிறந்தநாளையொட்டி விருதுநகர் மேற்கு மாவட்டம் சிவகாசியில் கிழக்கு ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் பொதுக்கூட்டம் நடந்தது. சிவகாசி கூட்டுறவு பண்டகசாலை தலைவர் அசன்பதுருதீன் தலைமை தாங்கினார்.
இதில் சிறப்பு அழைப்பாளர்களாக அமைப்பு செயலாளரும், விருதுநகர் மேற்கு மாவட்ட செயலாளருமான முன்னாள் அமைச்சர் கே.டி. ராஜேந்திரபாலாஜி, சாத்தூர் முன்னாள் எம்.எல்.ஏ. ராஜ வர்மன், தலைமைக்கழக பேச்சாளர்கள் செல்வம், பரமக்குடி ஜமால், மான்ராஜ் எம்.எல்.ஏ., எம்.ஜி.ஆர். மன்ற துணைச் செயலாளர் சுப்பிரமணி, விருதுநகர் மாவட்ட மகளிர் அணி செயலாளர் சுபாஷினி உள்ளிட்டோர் கலந்து கொண்டு பேசினர்.
முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேசியதாவது:-
மக்களுக்காக வாழ்ந்த தலைவர்கள் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா வழியில் எடப்பாடியார் சிறப்பாக செயலாற்றிக்கொண்டு வருகிறார். ஜெயலலிதா காலத்துக்கு பிறகு தமிழ கத்தில் ஏழை- எளிய மக்களுக்கு எண்ணற்ற திட்டங்களை செயல்ப டுத்தியவர் எடப்பாடியார். கடந்த 10 ஆண்டுகளில் அ.தி.மு.க. ஆட்சியில் சொத்து வரி உயர்வு கிடையாது, மின் கட்டண உயர்வு கிடையாது, பஸ் கட்டணம் உயர்வு கிடையாது, விலைவாசி உயர்வு கிடையாது.
ஏழைகளை பாதிக்கின்ற எந்த செயலையும் அ.தி.மு.க. அரசு செயல்படுத்தவில்லை. அறிவியல் கல்லூரியை நாங்கள்தான் கொண்டு வந்தோம்.
அ.தி.மு.க. ஆட்சியில் பட்டாசு தொழில் பாதுகாக்கப்பட்டது. தற்போது பட்டாசு ஆலைகளில் அதிகாரிகள் தொடர்ந்து சோதனையில் ஈடுபட்டுள்ளதால் பட்டாசு தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
ஆட்சிக்கு வந்து 2 ஆண்டுகளில் ஏழைகளுக்கான அனைத்து திட்டங்களையும் நிறுத்திய பெருமைக்கு சொந்தக்காரர்கள் தி.மு.க. ஆட்சியாளர்கள்.
ஜெயலலிதா கொண்டு வந்த திட்டங்கள், எடப்பாடியார் கொண்டு வந்த அனைத்து திட்டங்களையும் தி.மு.க. அரசு நிறுத்திவிட்டது.
அம்மா பரிசு பெட்டகம், தாலிக்கு தங்கம், திருமண உதவித்தொகை, கல்வி உதவித்தொகை இப்படி பல்வேறு அ.தி.மு.க.வின் திட்டங்களை நிறுத்தி விட்டனர். சைக்கிள் வழங்குவதை பாதியாக குறைத்து விட்டனர். லேப்டாப் கொடுப்பதை நிறுத்திவிட்டனர்.
முதியோர் பென்ஷன் அனைத்தையும் நிறுத்திவிட்டனர். அ.தி.மு.க. அரசின் எல்லா திட்டங்களும் முடக்கப்பட்டுள்ளது.
மகளிருக்கு ரூ. 1000 தருவதாக சொன்ன தி.மு.க. இதுவரை வழங்கவில்லை. தி.மு.க. கொடுத்த 520 தேர்தல் அறிக்கையும் பொய். நாடாளுமன்ற தேர்தலோடு சட்டமன்ற தேர்தல் வர உள்ளதால் தி.மு.க.வினருக்கு வயிற்றில் புளியை கரைக்கிறது. ஒரே நாடு, ஒரே தேர்தல் வரும் என்ற அச்சத்தில் தி.மு.க.வினர் உள்ளனர். எந்த நேரத்திலும் இரு தேர்தலும் ஒரே நேரத்தில் வரலாம். மக்கள் தயாராக இருந்து அ.தி.மு.க.வை மீண்டும் ஆட்சியமர்த்த வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.