- முன்னோடி விவசாயிகள், கூட்டுறவு பால் உற்பத்தி சங்கங்கள் தேசிய விருது பெற விண்ணப்பிக்கலாம்.
- விருதுநகரில் உள்ள கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குநர் அலுவலகத்தை அணுகலாம்.
விருதுநகர்
விருதுநகர் மாவட்ட கலெக்டர் மேகநாதரெட்டி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த முன்னோடி விவசாயிகள், செயற்கைமுறை கருவூட்டல் பணியாளர்கள் மற்றும் கூட்டுறவு பால் உற்பத்தி சங்கங்கள் தேசிய அளவில் சிறப்பாக செயல்பாட்டில் இருப்பவர்களுக்கு விருதுகள் வழங்கி கவுரவிக்க ''ராஷ்ட்ரிய கோகுல் இயக்கம்'' மூலம் மத்திய அரசின் இணையதளத்தில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
முதலாவதாக முன்னோடி விவசாயிகள் தேசிய அளவில் அங்கீகரிக்கப்பட்ட உள்நாட்டு 50 பசுவினம் மற்றும் 17 எருமை இனங்களில் ஒன்றினை பராமரித்து நல்ல முறையில் கால்நடை செல்வத்தை பெருக்கி சிறப்பாக பண்ணை தொழிலை மேற்கொள்ளும் விவசாயிக்கு தேசிய அளவில் விருது வழங்கப்பட இருக்கிறது.
அடுத்ததாக கால்நடைகளுக்கு செயற்கைமுறை கருவூட்டல் பணியினை மேற்கொண்டு சிறப்பாக கிராமங்களில் பணிபுரிந்து அரசின் திட்டங்களில் பங்கேற்று மக்களுக்கு அதனை கொண்டு சென்ற விதத்தில் 90 நாட்கள் பயிற்சி பெற்ற செயற்கைமுறை கருவூட்டல் பணியாளர்களுக்கு விருதுகள் வழங்கப்பட இருக்கிறது.
சிறப்பாக செயல்படும் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம் குறைந்தது ஒரு நாளைக்கு 100 லிட்டர் பால் சேகரிப்புடன் 50 உறுப்பினர்கள் உள்ளடக்கியதோடு அரசின் திட்டங்களை மக்களுக்கு கொண்டு சேர்ப்பதில் செவ்வனே செயல்பட்டு கிராமப் பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகிக்கும்படியாக இயங்கி வரும் சங்கங்களுக்கு தேசிய அளவில் விருது வழங்கப்பட இருக்கிறது.
இந்த விருதின் பெயர் ''தேசிய கோபால் ரத்னா'' விருது ஆகும். இந்த விருது தேசிய பால் தினமான நவம்பர் 26 அன்று மத்திய அரசால் வழங்கப்படும். முதல் பரிசாக ரூ.5 லட்சம், 2-வது பரிசாக ரூ. 3 லட்சம், 3-வது பரிசாக ரூ. 2 லட்சம் வழங்கப்பட இருக்கிறது. விண்ணப்பதாரர்கள் மத்திய அரசின் கால்நடை பராமரிப்புத்துறை, மீன்வளம் இணையதளத்தில் (https://awards.gov.in/Home/Awardpedia?MinistryId=DO23&OnGoingAwards=1& ptype=P https://awards.gov.in/Home/AwardLibrary) விண்ணப்பிக்க வேண்டும்.
நாளை (10-ந் தேதி) விண்ணப்பிக்க இறுதி நாளாகும். இந்த விருது தொடர்பாக கூடுதல் விவரங்கள் தேவைப்படின் ராஜபாளையத்திலுள்ள கால்நடை மருத்துவப் பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிலையம் மற்றும் விருதுநகரில் உள்ள கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குநர் அலுவலகத்தை அணுகலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.