- விருதுநகரில் புனித மண் சேகரிக்கப்பட்டது.
- இந்த மண் கலசம் ஆளுநர் ரவியிடம் ஒப்படைக்கப்பட உள்ளது.
விருதுநகர்
டெல்லியில் அமிர்த வனம் அமைக்கப்பட உள்ளது. இதற்காக நாடு முழுவதும் இருந்து புனித மண் சேகரிக்கப்பட்டு அங்கு கொண்டு செல்லப்படுகிறது. பா.ஜ.க. சார்பில் என் மண் என் தேசம் என்ற இந்த நிகழ்ச்சி நாடு முழுவதும் நடத்தப்படுகிறது. அந்த வகையில் விருதுநகர் கிழக்கு மாவட்ட பா.ஜ.க. சார்பில் விருதுநகர் காமராஜர் பிறந்த இடம், தியாகி சங்கரலிங்கனார் நினைவு மண்டபம், தியாகிகள் அதிகம் வாழ்ந்த மீசலூர், எரிச்சநத்தம் கிராமத்தில் உள்ள பழமையான சிவன் கோவில், பாவாலி கிராமத்தில் வீரபாண்டிய கட்டபொம்மன் விடுதலைப் போரின் போது வந்து சென்றதாக தாமிரபட்டயம் உள்ள இடம் ஆகிய பகுதிகளில் இருந்து கலசத்தில் புனித மண் சேகரிக்கப்பட்டது. இந்த மண் கலசம் ஆளுநர் ரவியிடம் ஒப்படைக்கப்பட உள்ளது. இந்த நிலையில் விருதுநகர் பழைய பஸ் நிலையம் அருகில் மண் கலசம் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டிருந்தது.
அங்கு பா.ஜ.க.வினர் தேச ஒற்றுமை உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். இதில் விருதுநகர் மாவட்ட பா.ஜ.க. பார்வையாளர் வெற்றி வேல், மாநில பொதுக்குழு உறுப்பினர் சந்திரசேகரன், நகர தலைவர் நாகராஜன், பட்டியலின தலைவர் குருசாமி மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.