உள்ளூர் செய்திகள்

எடை அளவுகளை முத்திரையிடாமல் பயன்படுத்திய வியாபாரிகள் மீது வழக்கு

Published On 2022-10-15 08:18 GMT   |   Update On 2022-10-15 08:18 GMT
  • எடை அளவுகளை முத்திரையிடாமல் பயன்படுத்திய வியாபாரிகள் மீது வழக்கு பதிந்துள்ளனர்.
  • 2009-ம் வருட சட்டமுறை எடையளவு சட்டம் மற்றும் விதிகளின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

விருதுநகர்

சென்னை தொழிலாளர் ஆணையர் அதுல் ஆனந்த், மதுரை கூடுதல் தொழிலாளர், ஆணையர் குமரன் ஆலோசனையின்படியும் ஆணையின்படியும், மதுரை தொழிலாளர் இணை ஆணையர் சுப்பிரமணியன் வழிகாட்டுதலின்படியும்,

விருதுநகர் தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) காளிதாஸ் தலைமையில் தொழிலாளர் துணை ஆய்வர்கள் மற்றும் உதவி ஆய்வர்கள் அடங்கிய குழுவினர் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஜவுளி மற்றும் ஆயத்த ஆடை கடைகள், இனிப்புக் கடைகள் மற்றும் நிறுவனங்களில் சோதனை நடத்தினர்.

அப்போது எடை அளவுகளை உரிய காலத்தில் பரிசீலனை செய்து முத்திரையிடாமல் வியாபார உபயோகத்தில் வைத்திருந்த 8 வியாபாரிகள் மீதும், எடையளவுகள் மறுமுத்திரையி டப்பட்டதற்கான சான்றினை நுகர்வோர்கள் பார்க்கும் வகையில் வெளிக்காட்டி வைக்காத 12 வியாபாரிகள் மீதும், தராசின் எடையினை சரிபார்க்க வியாபாரிகள் வைத்திருக்க வேண்டிய சோதனை எடை கற்கள் வைத்திருக்காத 7 வியாபாரிகள் மீதும், 2009-ம் வருட சட்டமுறை எடையளவு சட்டம் மற்றும் விதிகளின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

எடை அளவுகளை உரிய காலத்தில் முத்திரையிடாமல் பயன்படுத்தும் வியாபாரிகளுக்கு சட்டமுறை எடையளவு சட்டத்தின் கீழ் முதல் குற்றச்சாட்டிற்கு ரூ.25 ஆயிரம் வரை அபராதமும். 2-ம் மற்றும் அதற்கு அடுத்த குற்றங்களுக்கு 6 மாதம் வரை சிறை தண்டனை மற்றும் அபராதம் கோர்ட்டு மூலம் விதிக்க வழிவகை உள்ளது.

சிவகாசி, விருதுநகர் தொழிலாளர் துணை ஆய்வாளர்களான முத்து, சதாசிவம், விருதுநகர், அருப்புக்கோட்டை, சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம், உசிலம்பட்டி தொழிலாளர் உதவி ஆய்வர்களான தயாநிதி, உமாமகேஸ்வரன், துர்கா, பாத்திமா, முருகன், சிவசங்கரி ஆகியோர் இந்த சோதனையில் ஈடுபட்டனர்.

இந்த தகவலை விருதுநகர் தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) காளிதாஸ் தெரிவித்தார்.

Tags:    

Similar News