சாலைகளில் தேங்கிய தண்ணீரால் பொதுமக்கள்-வாகன ஓட்டிகள் அவதி
- சாலைகளில் தேங்கிய தண்ணீரால் பொதுமக்கள்-வாகன ஓட்டிகள் அவதிப்பட்டனர்.
- சாலைகளில் பள்ளம் தோண்டுவது பெரும்பாலான இடங்களில் நடந்து வருகிறது.
ராஜபாளையம்
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் நேற்று மாலை கருமேகங்கள் திரண்டன. 5 மணிக்கு இடி மின்னலுடன் கனமழை பெய்தது. ஒரு மணி நேரம் பெய்த இந்த மழை காரணமாக சங்கரன் கோவில் முக்கு, காந்தி கலைமன்றம், சத்திரப்பட்டி ரோடு, பழைய பஸ் நிலையம், பஞ்சு மார்க்கெட் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழைநீர் சாலைகளில் ஆறாக பெருக்கெடுத்து ஓடியது.
மாலை நேரத்தில் பெய்த மழையால் கல்லூரி மற்றும் வேலை முடிந்து வீட்டுக்கு சென்றவர்கள் கடும் அவதியடைந்தனர். நேற்று பெய்த ஒரு மணி நேர பலத்த மழையால் ராஜபாளையம்-சத்திரப்பட்டி சாலையில் மழைநீர் குளம்போல் தேங்கியது.
இங்கு கடந்த 2018-ம் ஆண்டு முதல் ரெயில்வே மேம்பாலம் கட்டும் பணி நடந்து வருகிறது. ஆமை வேகத்தில் நடக்கும் இந்த பணிகள் தற்போது வரை முடியவில்லை. இதன் காரணமாக ராஜபாளையம்-சத்திரப்பட்டி சாலைகள் குண்டும், குழியுமாக காட்சியளிக்கின்றன. நேற்று பெய்த கனமழையால் இந்தப்பகுதியில் சாலைகளில் குளம்போல் தண்ணீர் தேங்கியது. இதனால் அந்த வழியாக சென்ற பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அப்பகுதியை கடந்துசெல்ல முடியாமல் கடும் சிரமம் அடைந்தனர்.
இதேபோல் சத்திரப்பட்டி, ஆலங்குளம், வெம்பக்கோட்டை ஆகிய பகுதிகளுக்கு செல்லும் கணபதியாபுரம் ரெயில்வே தரைபாலத்திலும், மலையடிப்பட்டி சாலையிலும் தண்ணீர் முழங்கால் அளவுக்கு தேங்கியது. இதனால் அந்த வழியே சென்ற கனரக வாகனங்கள் மிகுந்த சிரமத்துடன் கடந்து சென்றன.
ராஜபாளையம் நகரில் கடந்த சில ஆண்டுகளாக வளர்ச்சி திட்டப்பணிகள் என்ற பெயரில் சாலைகளில் பள்ளம் தோண்டுவது பெரும்பாலான இடங்களில் நடந்து வருகிறது. இதனால் நகரில் பெரும்பாலான சாலைகள் குண்டும், குழியுமாக காட்சியளிக்கின்றன.
மழை நேரத்தில் இந்த பள்ளங்களில் தண்ணீர் தேங்கிவிடுவதால் பாதசாரிகளும், வாகன ஓட்டிகளும் கடும் சிரமத்துக்கு உள்ளாகின்றனர்.