கல்லூரி பேருந்தில் புகை: டிரைவர் சமயோசிதத்தால் விபத்து தவிர்ப்பு
- கல்லூரி பேருந்தில் திடீரென புகை ஏற்பட்டது.
- டிரைவர் சமயோசிதத்தால் விபத்து தவிர்க்கப்பட்டது.
ராஜபாளையம்
சிவகாசியில் உள்ளது பிரபல தனியார் கல்லூரி. ராஜபாளையம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வசிக்கும் மாணவ-மாணவிகள் கல்லூரி பேருந்தில் தினமும் கல்லூரிக்கு செல்வது வழக்கம். இன்று காலை வழக்கம் போல கல்லூரி பேருந்து மாணவ-மாணவிகளை அழைத்துக்கொண்டு ராஜபாளையம் வழியாக கல்லூரிக்கு சென்று கொண்டிருந்தது. தென்காசி ரோட்டில் பஸ் சென்று கொண்டிருந்த போது பேட்டரி பகுதியில் இருந்து புகை வெளியானது. இதைப்பார்த்த பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் சத்தம் போட்டு பஸ்சை நிறுத்தினர். பஸ்சிலிருந்து டிரைவர் இறங்கிவந்து பேட்டரி பேனல் கதவைத் திறந்து பார்த்த போது அதிக புகை வெளியானது. உடனடியாக சமயோசிதமாக பேட்டரி வயரை துண்டித்து மாணவ-மாணவிகளை பஸ்சிலிருந்து பாதுகாப்பாக இறக்கிவிட்டார். இதனால் பெரும்விபத்து தவிர்க்கப்பட்டது.
ஆனால் சென்சாரை சரி செய்தால் மட்டுமே பஸ்சை நகர்த்த முடியும் என்பதால், ஏற்கனவே போக்குவரத்து நெரிசல் மிக்க அந்த சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பழைய பஸ் நிலைய மேம்பாட்டுப் பணிகள், தாமிரபரணி குடிநீர் திட்டப்பணிகள், பாதாள சாக்கடை பணிகள் அனைத்தும் ஒரே நேரத்தில் நடைபெற்று வருவதால் அந்த சாலையே தற்போது பிரதான சாலையாக உள்ளது. இதனால் அந்தப் பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. போக்குவரத்து போலீசார் மெக்கானிக்கை வரவழைத்து கடுமையாகப் போராடி பஸ்சை அப்புறப்படுத்தி சரிசெய்து அனுப்பிவைத்தனர். இதனால் 1 மணி நேரத்திற்கும் மேலாக அந்தப் பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.