போதைக்கு அடிமையாகாமல் மாணவர்கள் தவிர்க்கலாம்-கலெக்டர்
- போதிய விழிப்புணர்வு இருந்தால் போதைக்கு அடிமையாகாமல் மாணவர்கள் தவிர்க்கலாம் என கலெக்டர் கூறியுள்ளார்.
- இளமைகால பருவத்தை நல்வழியில் பயன்படுத்த வேண்டும்.
விருதுநகர்
விருதுநகர் மாவட்டம் கிருஷ்ணன்கோவில் கலச லிங்கம் பல்கலைக்கழகத்தில் மதுவிலக்கு மற்றும் ஆயத் தீர்வைத் துறையின் சார்பில் மது அருந்துதல் மது அருந்தி வாகனம் ஓட்டுதல் மற்றும் போதைப் பொருட்களை பயன்படுத்துவதற்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. மாவட்ட கலெக்டர் ஜெயசீலன் தலைமை தாங்கினார். பின்னர் அவர் பேசியதாவது:-
விருதுநகர் மாவட்டத்தில் போதைப்பொருட்களை தடுப்பதற்கும், முற்றிலுமாக ஒழிப்பதற்கும் பல்வேறு நடவடிக்கைகளும், பொதுமக்கள், பள்ளி, கல்லூரி மாணவர்களி டையே பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. நண்பர்கள் மூலமும், சூழ்நிலையின் காரணமாகவும் போதை பழக்கம் உருவாகிறது.
சரியான விழிப்பு ணர்வு இருந்தால் போதைக்கு அடிமையாகாமல் தவிர்க்கலாம். போதையால் ஒரு நொடியில் ஏற்படக்கூடிய இன்பத்திற்காக வாழ்நாள் முழுவதும் பாழாகிவிடும். படிப்பு, வேலை உள்ளிட்டவைகளால் ஏற்படக்கூடிய மன அழுத்தத்தை கட்டுப்படுத்துவதற்கு போதைப் பொருள் தீர்வு அல்ல. மாணவர்கள் தங்கள் இளமைகால பருவத்தை நல்வழியில் பயன்படுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.