புதிய கணக்கு தொடங்க கூட்டுறவு வங்கியில் திரண்ட பெண்கள்
- மகளிர் உரிமை தொகை திட்டத்துக்காக புதிய கணக்கு தொடங்க கூட்டுறவு வங்கியில் பெண்கள் திரண்டனர்.
- மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுக்கப்பட்டது.
திருச்சுழி
தமிழக அரசின் கலைஞர் மகளிர் உரிமை தொகை பெறுவதற்காக அரசு அறிவித்தபடி கடந்த சில நாட்களாக ரேசன் கடைகள் மூலமாக விண்ணப்ப படிவங்கள் வழங்கப்பட்டு வந்தது. மேலும் பொது மக்களின் தேவையற்ற அலைச்சலை தவிர்க்கும் பொருட்டு பொதுமக்களுக்கு வழங்கப்பட்ட போதே டோக்கனில் முகாமிற்கு செல்லும் நாள், டோக்கன் எண் ஆகியவை தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில் கூட்டுறவு வங்கியில் கணக்கு தொடங்கினால் தான் கலைஞர் உரிமை தொகை பெற முடியும் என ரேசன்கடை ஊழியர்கள் விண்ணப்பம் வழங்கும்போதே கூறியதாக பொதுமக்கள் தெரிவித்தனர்.
அதனடிப்படையிலேயே மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் நரிக்குடி கிளை யில் நேற்று கணக்கு தொடங்க ஒரே நேரத்தில் பொதுமக்கள் கூட்டமாக திரண்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதனால் விண்ணப்ப பதிவு முகாம்களுக்கு செல்ல முடியாமல் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர். இந்த நிலையில் பதிவு முகாம்களிலும் பொதுமக்கள் கூட்டம் மிகவும் குறைந்து வெறிச்சோடி காணப்பட்டது.
மேலும் முதல் கட்டமாக விண்ணப்ப பதிவு முகாம் கள் தொடங்கப்பட்ட நிலையில் ஒரே நாளில் வங்கியில் புதிய கணக்கு தொடங்கவும், டோக்கனில் குறிப்பிட்டுள்ள தேதியில் விண்ணப்ப பதிவு முகாம் களுக்கு சென்று பதிவுகள் செய்யவும் வேண்டியுள்ள தால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர்.
ஆனால் அதற்கான சரியான நேரம் இதுவல்ல எனவும் பொதுமக்கள் ஆலோசனை தெரிவித்தனர்.ஆகவே மாவட்ட நிர்வாகம் இதுகுறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மாவட்ட கலெக்டருக்கு கூட்டாக கோரிக்கை விடுத்துள்ளனர்.