7 பேர் பலியான சம்பவம் எதிரொலி: கடலூர் மாவட்ட ஆறுகளில் எச்சரிக்கை பலகை
- கெடிலம் ஆற்றில் தேங்கிய தண்ணீரில் மூழ்கி 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
- மாவட்ட நிர்வாகம் சார்பில் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
கடலூர்:
கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் அருகே கீழ் அருங்குணம் கிராமம் கெடிலம் ஆற்றில் தேங்கிய தண்ணீரில் மூழ்கி, 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் இந்தியாவையே உலுக்கி உள்ளது. இதனை தொடர்ந்து ஜனாதிபதி, பிரதமர் மற்றும் பல்வேறு கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்தார்.
இச்சம்பவத்திற்கு இரங்கல் தெரிவித்த முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின், "நீர்நிலைகளில் குளிக்கச் செல்லும் சிறுவர்கள் மற்றும் இளைஞர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதில் அனைவரும் கவனம் செலுத்த வேண்டும். வந்தபின் தவிப்பதை விட வருமுன் பாதுகாக்க வேண்டும்.
நீர்நிலைகளில் ஏற்படும் ஆபத்துக்களை சிறுவர், சிறுமியர், இளைஞர்களுக்கு எடுத்துக்கூற வேண்டும், காக்க ஆழமான ஆறு, குளம் அருகே எச்சரிக்கை பலகை வைக்க வேண்டும்" என, மாவட்ட நிர்வாகத்திற்கு அறிவுறுத்தினார்.
அதன்படி கடலூர் மாவட்டத்தில் ஆறு, குளம், ஏரி மற்றும் தடுப்பணை உள்ளிட்ட நீர்நிலைகளில் இறங்கி குளிப்பதை கண்டிப்பாக தவிர்க்கும்படியும், சிறுவர்களையும் உரிய முறையில் பெற்றோர் கண்காணிக்க வேண்டும் எனவும், மாவட்ட நிர்வாகம் சார்பில் பொது மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
கடலூர் மாவட்டத்தில் ஆபத்தான நீர்நிலை பகுதிகளில் குளிக்க வேண்டாம் என, எச்சரிக்கை பலகை வைக்க, பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.
அதன்பேரில், மாவட்டம் முழுவதும் எச்சரிக்கை பலகைகள் வைக்கப்பட்டு வருகிறது. 7 பேர் பலியான சம்பவம் நடந்த கெடிலம் பண்ருட்டி முதல் கடலூர் வரையில் தண்ணீர் தேங்கியுள்ள 4 இடங்களிலும், பெண்ணையாற்றில் கண்டரக்கோட்டை பகுதியில் இருந்து கடலுார் மஞ்சக்குப்பம் வரையில் நெல்லிக்குப்பம், சாவடி, செம்மண்டலம் உள்ளிட்ட 5 இடங்களிலும் முதல் கட்டமாக எச்சரிக்கை பலகை வைக்கப்பட்டது.
எச்சரிக்கை பலகைவைப்பதுடன், போலீசார் மூலம் கண்காணிப்பு பணியில் ஈடுபடுவதில் மாவட்ட நிர்வாகம் கவனம் செலுத்தினால், இனி மாவட்டத்தில் நீர்நிலை உயிரிழப்புகளை முற்றிலும் தடுக்க முடியும்