பாகுபலியை பிடிப்பதற்காக மேட்டுப்பாளையம் வந்த கும்கி யானை வசீம் மீண்டும் முதுமலைக்கு சென்றது
- பாகுபலிக்கு மயக்க ஊசி செலுத்தி பிடிக்க வேண்டிய அவசியம் இல்லை.
- மற்றொரு கும்கி யானை விஜய் இன்று மாலை அல்லது நாளை முதுமலைக்கு அனுப்பி வைக்கப்படும்
மேட்டுப்பாளையம்,
மேட்டுப்பாளையம் மற்றும் சுற்றுவட்டாரப்பகுதியில் பாகுபலி யானை, வாய்ப்பகுதியில் காயத்துடன் சுற்றி திரிந்தது. இதனால் அதனை மயக்க ஊசி செலுத்தி பிடித்து சிகிச்சையளிப்பது என்று வனத்துறை முடிவுசெய்தது.
இதற்காக வனத்துறை கால்நடை மருத்துவர் சுகுமார் தலைமையில் 4 பேர் அடங்கிய குழுவினர் மேட்டுப்பாளையம் வந்தனர். அவர்களுக்கு உதவியாக கோவை சாடிவயல் முகாமில் இருந்து வளவன், பைரவா என்ற 2 மோப்ப நாய்கள் வரவழைக்கப்பட்டன.
இதற்கிடையே பாகுபலியை பிடிக்கும் முயற்சிக்கு உதவியாக இருக்கும் வகையில், நீலகிரி மாவட்டம் முதுமலை வளர்ப்பு யானைகள் முகாமில் இருந்து விஜய், வசீம் ஆகிய 2 கும்கி யானைகளும் கொண்டு வரப்பட்டன. அந்த யானைகள் மேட்டுப்பாளையம் - கோத்தகிரி சாலையில் உள்ள வனத்துறை மரக்கிடங்கில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தன.
இந்த நிலையில் பாகுபலியை தீவிரமாக கண்காணித்த வனத்துறை மருத்துவ குழுவினர், அந்த யானை முழு உடல் நலத்துடன் உள்ளது, எனவே மயக்க ஊசி செலுத்தி பிடிக்க வேண்டிய அவசியம் இல்லை என்று அரசுக்கு அறிக்கை சமர்ப்பித்தது. எனவே கோவை சாடிவயல் முகாமில் இருந்து வரவழைக்கப்பட்ட மோப்ப நாய்கள் மீண்டும் திருப்பி அனுப்பப்பட்டன.
இந்த நிலையில் கும்கி யானைகளையும் திருப்பி அனுப்புவது என்று வனத்துறை முடிவு செய்தது.
அதன்படி கும்கி யானை வசீம் இன்று அதிகாலை மீண்டும் முதுமலை வளர்ப்பு யானைகள் முகாமிற்கு பத்திரமாக அனுப்பி வைக்கப்பட்டது.
மற்றொரு கும்கி யானை விஜய் இன்று மாலை அல்லது நாளை வாகனத்தில் ஏற்றப்பட்டு முதுமலைக்கு அனுப்பி வைக்கப்படும் என வனத்துறையினர் தெரிவித்து உள்ளனர்.