உள்ளூர் செய்திகள்

ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 70 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு: 11-வது நாளாக குளிக்க தடை

Published On 2024-07-26 05:09 GMT   |   Update On 2024-07-26 05:09 GMT
  • கர்நாடகாவில் இருந்து 1 லட்சம் கனஅடி தண்ணீர் திறப்பு.
  • ஐந்தருவி, சினி பால்ஸ், மெயின் அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது.

தருமபுரி:

கர்நாடகா கேரளா மாநிலங்களில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து உள்ளதால் கர்நாடகா மாநிலத்தில் உள்ள கபினி கிருஷ்ணராஜ சாகர் உள்ளிட்ட அணைகளில் வேகமாக நிரம்பி வருகின்றன. இதனால் கபினி கிருஷ்ணராஜ் சார் ஆகிய இரு அணைகளில் இருந்து நேற்று 1 லட்சம் கனஅடிக்கு உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

இந்த நீர் வரத்து காரணமாக ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து நேற்று மாலை வரை 56 ஆயிரம் கன அடியாக இருந்த நீர்வரத்து படிப்படியாக அதிகரித்து இன்று காலை 6 மணி நிலவரப்படி வினாடிக்கு 62 ஆயிரம் கன அடியாகவும் தற்போதைய நிலவரப்படி மேலும் அதிகரித்து வினாடிக்கு 70 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது.

இந்த நீர் வரத்து அதிகரிப்பு காரணமாக ஐந்தருவி, சினி பால்ஸ், மெயின் அருவி ஆகிய அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது.

நீர்வரத்து தொடர்ந்து அதிகரிப்பதன் காரணமாக ஒகேனக்கல் காவிரி ஆற்றில் பரிசல் இயக்கவும் அருவி மற்றும் ஆற்றுப்பகுதியில் குளிக்கவும் மாவட்ட நிர்வாகத்தால் விதிக்கப்பட்ட தடை தொடர்ந்து 11-வது நாளாக தடை நீடித்து வருகிறது.

ஒகேனக்கல்லுக்கு வந்த சுற்றுலா பயணிகள் அருவிகள் மற்றும் காவிரி ஆற்றில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளதாலும், பரிசல் இயக்க தடைவிதிக்கப்பட்டு உள்ளதாலும் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

மேலும் போலீசார், ஊர்க்காவல் படையினர், தீயணைப்புத்துறையினர் காவிரி கரையோர பகுதிகளில் சுற்றுலா பயணிகள் யாரும் குளிக்க விடாமல் தடுத்து தீவிர ரோந்து பணியில் கண்காணித்து வருகின்றனர்.

கர்நாடகா அணைகளில் இருந்து 1 லட்சம் கனஅடிக்கு மேல் நீர் திறக்கப்பட்டதால், காவிரி ஆற்றில் வரும் நீர்வரத்தை காவிரி நுழைவிடமான கர்நாடகா தமிழக எல்லையான பிலிகுண்டுலுவில் வெள்ள பெருக்கு ஏற்பட வாய்ப்புள்ளதால் நீர்வரத்தை மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தீவிரமாக தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். 

Tags:    

Similar News