லேசர் ஒளிகளால் ஜொலித்த அருவிகள்: குற்றாலம் சாரல் திருவிழா கோலாகலமாக தொடங்கியது அமைச்சர்கள்-நடிகர், நடிகைகள் பங்கேற்றனர்
- விழாவை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், தொழிற்துறை மற்றும் தமிழ் வளர்ச்சி மற்றும் தொல்லியல்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு ஆகியோர் திருவிழாவின் லோகோ அடங்கிய புத்தகத்தை வெளியிட்டனர்.
- நீர்நிலைகளை கொண்டாடும் மரபில் வந்த நாம் குற்றாலம் அருவிகளில் தண்ணீர் கொட்டும் காலத்தில் சாரல் விழா நடத்துகிறோம்.
தென்காசி:
தென்காசி மாவட்டம் உதயமான பின்னர் முதல் முறையாக குற்றாலத்தில் சாரல் விழா குற்றாலம் கலைவாணர் அரங்கில் நேற்று மாலை தொடங்கியது.
விழாவை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், தொழிற்துறை மற்றும் தமிழ் வளர்ச்சி மற்றும் தொல்லியல்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, மாவட்ட கலெக்டர் ஆகாஷ் ஆகியோர் திருவிழாவின் லோகோ அடங்கிய புத்தகத்தை வெளியிட்டும் கேக் வெட்டியும் குத்துவிளக்கு ஏற்றியும் விழாவை தொடங்கி வைத்தனர்.
விழாவில் அமைச்சர் தங்கம் தென்னரசு பேசுகையில்,
நீர்நிலைகளை கொண்டாடும் மரபில் வந்த நாம் குற்றாலம் அருவிகளில் தண்ணீர் கொட்டும் காலத்தில் சாரல் விழா நடத்துகிறோம்.
குற்றாலம் என்ற பெயர் பராந்தகச் சோழன் கல்வெட்டில் இருந்து வருகிறது,இலக்கிய காலத்தில் இருந்து செழுமை மிக்க வரலாற்று தொடர்புடைய ஊர் குற்றாலமாகும் இதனால் இவ்விழாவில் நான் கலந்துகொண்டதில் மகிழ்ச்சியடைகிறேன் என்றார்.
பின்னர் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் பேசுகையில், நெல்லை மாவட்டத்தில் இருந்து பிரிக்கப்பட்ட தென்காசி மாவட்டம் தற்போது வளர வேண்டிய மாவட்டமாகும். இன்னும் அதிகப்படியான துறை அதிகாரிகள் இங்கு நியமனம் செய்யப்பட வேண்டியுள்ளது.
அதுகுறித்து மாவட்ட கலெக்டருடன் கலந்து பேசி விரைவில் முதல்-அமைச்சரின் கவனத்துக்கு கொண்டு சென்று விரைவில் அனைத்துத்துறை அதிகாரிகளும் நியமனம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
இவ்விழாவில் சட்டப்பேரவை பொது கணக்கு குழு தலைவர் செல்வபெருந்தகை, எம்.எல்.ஏ.க்கள் வேல்முருகன், பிரகாஷ், ரூபி மனோகரன், சிந்தனைச்செல்வன், காந்திராஜன், பழனிநாடார், சதன் திருமலைக்குமார், ராஜா, தென்காசி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கிருஷ்ணராஜ், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் தமிழ்ச்செல்வி, மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர்கள் சிவபத்மநாதன், செல்லத்துரை, தென்காசி நகர்மன்ற தலைவர் சாதிர், துணைத் தலைவர் சுப்பையா, கடையநல்லூர் நகர்மன்ற தலைவர் மூப்பன் ஹபீபுர் ரஹ்மான், கடையநல்லூர் ஊராட்சி ஒன்றிய துணைத்தலைவர் ஐவேந்திரன் தினேஷ்,செங்கோட்டை நகர்மன்ற தி.மு.க. செயலாளர் ரஹீம், இலஞ்சி முதல் நிலை பேரூராட்சி தலைவர் சின்னத்தாய், மேலகரம் முதல் நிலை பேரூராட்சி தலைவர் வேணி,பண்பொழி பேரூராட்சி தலைவர் ராஜராஜன், வல்லம் தொழிலதிபர் தி.மு.க. பாலகிருஷ்ணன், தி.மு.க. ஒன்றிய செயலாளர்கள் அழகுசுந்தரம், சீனி துரை, தி.மு.க. மாவட்ட சிறுபான்மை பிரிவு வீராணம் சேக் முகமது, பெரியபிள்ளை வலசை ஊராட்சி மன்ற தலைவர் வேல்சாமி, உட்பட பொதுமக்கள் திரளாக கலந்துகொண்டனர்.
மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் சுரேஷ் நன்றி கூறினார் தொடர்ந்து கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
திரைப்பட நடிகர் சூரி, சின்னத்திரை புகழ் நடிகை ரம்யா பாண்டியன் ஆகியோர் கலந்து கொண்ட கலை பண்பா–ட்டுத்துறை சார்பில் பொள்ளாச்சி மகேந்திரன் குழு–வினரின் ஜிக்காட்டம் நடைபெற்றது.
தொடர் வெள்ளப்பெருக்கு காரணமாக குற்றால அருவிகளில் குளிக்க பொதுமக்கள் சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டு இருந்தாலும் சாரல் திருவிழாவை முன்னிட்டு நேற்று இரவில் குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவிகள் அனைத்தும் லேசர் வண்ண விளக்குகளால் ஒளிர்ந்தன.
அதனை தென்காசி மக்கள் தொடர்பு அலுவலகம் சார்பில் அருவி பகுதிகளுக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால் சமூக வலைதளங்களில் பரப்பி பொதுமக்கள் பார்வைக்கு காட்சிப்படுத்தி வருகின்றனர்.