ஊட்டியில் நட்சத்திர ஓட்டல்களில் களை கட்டிய கேக் மிக்சிங் நிகழ்ச்சி
- ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் இருந்தே இந்த கேக் தயாரிப்பு விழா நடந்து வருகிறது.
- 25-வது ஆண்டாக ஜெம் பார்க் ஹோட்டலில் கேக் மிக்சிங் நிகழ்ச்சி நடைபெற்றது.
ஊட்டி
ஊட்டியில் உள்ள அனைத்து நட்சத்திர ஓட்டல்களிலும் கிறிஸ்துமஸ் கேக் தயாரிக்கும் விழா ஆண்டுதோறும் நவம்பர் மாதத்தில் நடத்தப்படும்.
ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் இருந்தே இந்த கேக் தயாரிப்பு விழா நடந்து வருகிறது. இந்த விழாவில் சம்பந்தப்பட்ட ஓட்டல் ஊழியர்கள் அனைவரும் ஒன்றுசேர்ந்து இந்த கேக்கை தயாரிப்பார்கள்.
மைதா மாவுடன் உலர் திராட்சை, செர்ரி, வால்நட், பாதாம், பிஸ்தா உள்பட 30-க்கும் மேற்பட்ட பொருட்கள் ஒன்றாக கலக்கப்படும். அதனுடன் ரம், ஒயின் உள்ளிட்ட மது வகைகளும் கேக் கலவையுடன் ஒன்றாக கலக்கப்படும்.
பிறகு இந்த கலவையை குறைந்தது ஒரு மாதத்துக்காவது பாதுகாப்பாக வைத்து பின், கேக் தயாரிக்கப்படும். எவ்வளவுக்கு எவ்வளவு இந்த பொருட்கள் ஊறி வருகிறதோ அந்த அளவுக்கு கேக்கின் ருசியும் அதிகமாகும். இது கிறிஸ்துமஸ் விழாவுக்காகவே தயாரிக்கப்படும் கேக் என்பதால் இதற்கான விழா எப்போதுமே எல்லா நட்சத்திர ஓட்டல்களிலும் வெகு சிறப்பாக நடைபெறும்
அதன்படி 25-வது ஆண்டாக ஜெம் பார்க் ஹோட்டலில் கேக் மிக்சிங் நிகழ்ச்சி நடைபெற்றது.
ஓட்டலின் இருப்பிட இயக்குநர், சுரேஷ்நாயர் உணவு மேலாளர் பிரதீப்குமார், சிறப்பு செப் சுரேந்திரன் ஆகியோர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் ஓட்டலின் முக்கிய வாடிக்கையாளர்கள், சிறப்பு அழைப்பாளர்கள், வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இது குறித்து இருப்பிட இயக்குநர் சுரேஷ்நாயர், உணவு மேலாளர் பிரதீப்குமார் ஆகியோர் கூறியதாவது:-
தற்போது நடைபெறும் இந்நிகழ்ச்சியில் சுமார் 60 கிலோ எடையிலான முந்திரி, உலர் திராட்சை, அத்திப் பழம், பேரீச்சம் பழம், பாதாம், பிஸ்தா உள்ளிட்ட 30 வகை பருப்புகளுடன், 7 வகையான மது, அன்னாசிப்பூ, இலவங்கம், ஜாதிக்காய் உள்ளிட்ட மருத்துவ மூலிகைகளும் சேர்த்து கலக்கப்பட்டு, மூடிவைக்கப்பட்ட மரக்குடுவையில் 30 நாள்களுக்கு இருட்டறை யில் வைக்கப்படும். இதை அவ்வப்போது திறந்து கிளறியும் வைக்க வேண்டும்.
30 நாள்களுக்குப் பின்னர் இந்தக் கலவை யுடன் மைதா, முட்டை, நெய், தேன் உள்ளிட்டவற்றை சேர்த்து கேக் தயாரிக்க ப்படும். அப்போது 120 கிலோ எடையிலான கேக் கிடைக்கும். இது கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு முன்னர் விருந்தினர்களுக்கு வினியோகிக்கப்படும்.
ஐரோப்பியர்கள் தொடக்க காலத்தில் கிறிஸ்துமஸ் கேக் தயாரிக்கும்போது மது வகைகளை மட்டுமே அதிக அளவில் பயன்படுத்தினர். ஆனால், அவர்கள் இந்தியாவுக்குள் வந்த பின்னர்தான் இந்திய மசாலாப் பொருள்க ளையும் சேர்த்து கேக் தயாரிக்க ஆரம்பித்தனர். தற்போது ஐரோப்பிய நாடுகளில் இத்தகைய கேக் வகைகளே பிரதான இடத்தில் உள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
இதேபோல ஊட்டியில் உள்ள பல்வேறு நட்சத்திர ஓட்டல்களிலும் கேக் மிக்சிங் நிகழ்ச்சி நடந்து வருகிறது.