10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 60 சதவீதத்துக்கு கீழ் தேர்ச்சி பெற காரணம் என்ன?
- மாணவர்களின் தேர்ச்சிவிகிதத்தை அதிகரிப்பது குறித்து கலந்துரையாடினார்.
- மாவட்ட வருவாய் அலுவலர் ராஜ்குமார், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்ரவிச்சந்திரன் கலந்து கொண்டனர்.
திருவள்ளூர்:
திருவள்ளூர் மாவட்டத்தில் 10,12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் அரசு பள்ளிகளில் மாணவ-மாணவிகளின் தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்க மாவட்ட நிர்வாகம் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. இதைத்தொடர்ந்து 60 சதவீதத்துக்கு கீழ் குறைவாக தேர்ச்சி பெற்ற அரசு பள்ளியின் தலைமையாசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களுடன் ஆலோசனை கூட்டம் மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர் தலைமையில் நடைபெற்றது.
மாணவர்களின் தேர்ச்சிவிகிதத்தை அதிகரிப்பது குறித்து கலந்துரையாடினார். மேலும் 60 சதவீதத்துக்கு குறைவாக தேர்ச்சி பெற்றுள்ள அரசு பள்ளிகளின் செயல்பாடுகள் குறித்து கேட்டறிந்தார்.
அப்போது கலெக்டர் பிரபுசங்கர் பேசியதாவது:-
பள்ளிகளில் மாதந்தோறும் மாணவ, மாணவிகளுக்கு தேர்வுகள் நடத்தி நன்றாக படிக்கும் மாணவர்கள், மிதமான முறையில் படிக்கும் மாணவர்கள், சரியாக படிக்காத மாணவர்கள் என கண்டறிந்து அவர்களை அட்டவணைப்படுத்த வேண்டும். பின்னர் அவர்களுக்கு ஏற்றார் போல் கல்வி பயிற்சி அளித்து தேர்ச்சி விகிதத்தினை அதிகரிக்கலாம். 10 மற்றும் 12-ம் வகுப்பில் அரசு பொதுத் தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவ மாணவிகளை தனித்தேர்வுகள் மூலம் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்று உயர்கல்வி சேர்வதற்கான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
முன்னதாக 10,12-ம் வகுப்பு பொதுத் தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ள அரசு பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களை பாராட்டி சான்றிதழ், மற்றும் கேடயத்தை கலெக்டர் பிரபுசங்கர் வழங்கினார். நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜ்குமார், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்ரவிச்சந்திரன் கலந்து கொண்டனர்.