மெத்தனால் எங்கிருந்து சப்ளை செய்யப்பட்டது? தமிழகம்-புதுச்சேரி எல்லையில் தீவிர கண்காணிப்பு
- புதுச்சேரியில் இருந்து மெத்தனால் சப்ளை செய்யப்பட்டதாக தகவல் வெளியானது.
- தமிழக போலீசார் நேற்று முன்தினம் இரவு திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.
புதுச்சேரி:
கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 56 பேர் பரிதாபமாக இறந்தனர்.
அதிக போதைக்காக சாராயத்தில் கலக்க புதுச்சேரியில் இருந்து மெத்தனால் சப்ளை செய்யப்பட்டதாக தகவல் வெளியானது.
இதன் தொடர்ச்சியாக தமிழக போலீசார் கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் ஈடுபட்டவர்களை கைது செய்து வருகிறார்கள்.
அதன் ஒரு பகுதியாக மெத்தனால் சப்ளை செய்யப்பட்டாக கூறபடும் புதுச்சேரி மாநில எல்லை யான மடுகரை உள்ளிட்ட இடங்களில் தமிழக போலீசார் நேற்று முன்தினம் இரவு திடீர் சோதனையில் ஈடுபட்டனர். ஆனால் அவர்கள் முறையாக அனுமதி பெறாமல் புதுச்சேரியில் சோதனை செய்ததாக கூறப்படுகிறது.
இதற்கிடையே தமிழக போலீசார் சோதனை குறித்து தகவல் அறிந்து புதுச்சேரி போலீசார் மடுகரைக்கு விரைந்தனர். இந்த சோதனைக்கு புதுச்சேரி போலீசார் எதிர்ப்பு தெரிவித்தனர்.
மேலும் புதுச்சேரியில் அனைத்து இடங்களிலும் ஏற்கனவே சோதனை நடத்திவிட்டோம். மெத்தனால் எங்கும் பதுங்கி வைக்கப்படவில்லை எனக்கூறி தமிழக போலீ சாரை திருப்பி அனுப்பினர்.
இது தொடர்பாக புதுச் சேரி போலீசார் தரப்பில் கூறுகையில், கள்ளக்குறிச்சி கள்ளச் சாராய வழக்கில் மாதேஷ் என்பவர் கைது செய்யப்பட்டார். அவரது உறவினர் வீடு புதுச்சேரி மாநில எல்லையான மடுகரை பகுதியில் உள்ளது. அங்கு சோதனை செய்யவும், விசாரணைக்காகவும் தமிழக போலீசார் வந்தனர்.
அப்போது அவர்கள் வந்த வாகனத்தில் சாராயத்தில் போதைக்காக பயன்படுத்தும் மெத்தனால் கேன் இருந்தது. இது சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது என்றனர்.
இதற்கிடையே புதுச்சேரி எல்லைகளில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மாதேசின் உறவினர் வீட்டை கண்காணிக்கவும் போலீசார் அங்கு நிறுத்தப்பட்டுள்ளனர். மேலும் அங்கு சி.சி.டி.வி. கேமரா பதிவுகளையும் போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.