உள்ளூர் செய்திகள்

தமிழக அமைச்சரவையில் புதிதாக இடம் பெறும் 2 அமைச்சர்கள் யார்-யார்?

Published On 2024-09-26 05:12 GMT   |   Update On 2024-09-26 05:12 GMT
  • அமைச்சரவையை முதலமைச்சர் 4 முறை மாற்றி அமைத்துள்ளார்.
  • 2 அமைச்சர்கள் நீக்கப்பட்டு புதிதாக 2 அமைச்சர்கள் சேர்க்கப்படுவார்கள்.

சென்னை:

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவை பதவி ஏற்று 3 வருடங்கள் நிறைவு பெற்று 4-வது ஆண்டில் சென்று கொண்டிருக்கிறது.

தமிழக அமைச்சரவையை இதுவரை 4 முறை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மாற்றி அமைத்துள்ளார்.

முதலாவதாக அமைச்சர் ராஜகண்ணப்பனிடம் இருந்த போக்குவரத்து துறை பறிக்கப்பட்டு அமைச்சர் சிவசங்கரிடம் ஒப்படைக்கப்பட்டது. அவரிடம் இருந்த பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை ராஜகண்ணப்பனிடம் வழங்கப்பட்டது.

அதன் பின்னர் சில மாதங்களில் 2-வது முறையாக மிகப்பெரிய அளவில் இலாகா மாற்றத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மேற்கொண்டார்.

அப்போது அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, பெரிய கருப்பன், மெய்யநாதன், ராமச்சந்திரன், மதிவேந்தன் உள்ளிட்ட சிலரது இலாகாக்கள் மாற்றப்பட்டன.

2022-ம் ஆண்டு டிசம்பரில் அமைச்சரவையில் உதயநிதி ஸ்டாலின் சேர்க்கப்பட்டர். இந்த அமைச்சரவை மாற்றம் நடைபெற்ற சில மாதங்களுக்குள் மீண்டும் அமைச்சரவை மாற்றி அமைக்கப்பட்டது.

2023-ம் ஆண்டு மே மாதம் அமைச்சரவை மாற்றி அமைக்கப்பட்ட போது ஆவடி சா.மு.நாசர் அமைச்சர் பதவியில் இருந்து விடுவிக்கப்பட்டு, டி.ஆர்.பி.ராஜா அமைச்சரவையில் சேர்க்கப்பட்டார். அவருக்கு தொழில் துறை ஒதுக்கப்பட்டது.

அந்த சமயத்தில் அமைச்சர் பழனிவேல் தியாகராஜனிடம் இருந்த நிதித்துறை மாற்றப்பட்டு அவருக்கு தகவல் தொழில்நுட்பத் துறை வழங்கப்பட்டது. இந்த துறையை பார்த்து வந்த மனோ தங்கராஜுக்கு பால் வளத்துறை ஒதுக்கப்பட்டது.

அமைச்சர் தங்கம் தென்னரசுக்கு மின்சாரத் துறையுடன் நிதித்துறையும் கிடைத்தது.

இந்தநிலையில் இலாகா இல்லாத அமைச்சராக சிறையில் இருந்த செந்தில் பாலாஜி 2024 பிப்ரவரி மாதம் தனது அமைச்சர் பதவியைராஜினாமா செய்தார்.

மீண்டும் இப்போது அமைச்சரவையை மாற்றி அமைப்பதற்கான முடிவில் முதலமைச்சர் உள்ளார். அடுத்த மாதம் செய்யப்பட உள்ள அமைச்சரவை மாற்றத்தில் உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதலமைச்சர் பதவி வழங்கப் பட உள்ளது.

அப்போது 2 அமைச்சர்கள் நீக்கப்பட்டு புதிதாக 2 அமைச்சர்கள் சேர்க்கப்படுவார்கள் என்று பரபரப்பாக பேசப்படுகிறது.

அந்த வகையில் செந்தில்பாலாஜிக்கு ஜாமீன் கிடைத்துள்ளதால் அவருக்கு மீண்டும் அமைச்சர் பதவி வழங்கப்படும். ஆவடி சா.மு.நாசர் மீண்டும் அமைச்சராக அதிக வாய்ப்புள்ளது.

இதுதவிர சேலம் ராஜேந்திரன் உள்ளிட்ட சிலரது பெயர்களும் அமைச்சர் பட்டியலில் உள்ளதாக கட்சி நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர்.

அடுத்த மாதம் 2-ந்தேதி அமாவாசைக்கு பிறகு வளர்பிறையில் நல்ல நாளில் புதிய அமைச்சர்கள் பதவி ஏற்கும் நிகழ்ச்சி இருக்கும் என்று கட்சி நிர்வாகிகள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

Tags:    

Similar News